திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடலி விளை கிராமத்தில் மாட்டுப் பொங்கலை ஒட்டி விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அவற்றுள் ஒன்றாக, தமிழர்களின் வீரத்தின் அடையாளமாகக் கருதப்படும் இளவட்டக்கல் தூக்கும் போட்டிகளும் நடைபெற்றன.
இப்போட்டியில், பதின்ம வயது இளையர்கள், திருமணமான ஆண்கள்-பெண்கள் பங்கேற்று தங்களது பலத்தை நிரூபித்துக் காட்டினர்.
50 கிலோ உரலை ஒரு கையில் அதிக நேரம் பிடித்த இளைஞர் அஜய், 21, முதல் பரிசும் பாலகிருஷ்ணன் 2ஆம் பரிசும் பெற்றனர்.
65 கிலோ இளவட்டக் கல்லை அநாயாசமாகத் தூக்கி 10 முறை கழுத்தைச் சுற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய மணமான பெண் ராஜகுமாரி, 35, முதல் பரிசும் பத்மா 4 முறை சுற்றி இரண்டாம் பரிசும் பெற்றனர்.
129 கிலோ எடையுள்ள இளவட்டக் கல்லை 4வது முறையாக தங்கராஜ் என்பவர் மட்டுமே தூக்கி முதல் பரிசை வென்றார்.
கைக்கு அகப்படாத மிகப்பெரிய கல்லை கட்டி அணைத்து, தன் முழு வலிமையையும் அந்தக் கல்லின் மீது செலுத்தி மெல்ல மெல்ல மேலே நெஞ்சின் மேற்பரப்பு வரை தூக்கி பின்பு தோள்பட்டையின் வழியே கழுத்தைச் சுற்றி கீழே போடும் முறையே, இளவட்டக் கல்லைத் தூக்கி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுகிறது.

