சென்னை: கொவிட்-19, ஓமிக்ரான் கிருமிப்பரவல், பொங்கல் பண்டிகைக்கான தொடர் விடுமுறை ஆகியவற்றின் காரணமாக சென்னை விமான நிலையத்துக்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
இதனால், விமான நிலையம் வெறிச்சோடிக் காணப்படுவதுடன், போதிய பயணிகள் இல்லாமல் 32 உள்நாட்டு விமானங்கள் வரை ரத்து செய்யப்பட்டன.
இயக்கப்படும் பெரும்பாலான விமானங்களிலும் மிகவும் குறைந்த அளவிலான பயணிகளே பயணம் செய்து வருகின்றனர்.
இதனால், ரத்து செய்யப்படும் விமானங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணம் ேமற்கொள் பவர்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காக, அதாவது 10,000 பேராகக் குறைந்துவிட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.
இதற்கிடையே, 32 விமானங்கள் ரத்தான நிலையில், "டிக்கெட் கட்டணம் திருப்பித் தரப்பட மாட்டாது. அதற்குப் பதிலாக வரும் மார்ச் 31ஆம் தேதி வரை தாங்கள் எடுத்துள்ள டிக்கெட்டுகளை மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
"முன்பதிவு செய்துள்ள நகரங்களுக்கு மட்டும்தான் பயணம் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. உள்நாட்டு விமானத்தில் எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம்," என விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
அதேநேரத்தில், இந்த அறிவிப்புக்கு பயணிகள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
தவறு தங்கள் மேல் இல்லை எனவும் பயணக் கட்டணத்தை தங்களிடம் மீண்டும் அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னைக்கு வரவேண்டிய பெங்களூர், டெல்லி, மும்பை, கோல்கத்தா, ஹைதராபாத், கொச்சி, மதுரை, தூத்துக்குடி, புனே, விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஞ்சி உள்ளிட்ட 16 விமானங்களும் சென்னையில் இருந்து இந்த நகரங்களுக்குச் செல்லவேண்டிய 16 விமானங்களும் என மொத்தம் 32 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

