சென்னை: தமிழக மக்களால் மக்கள் திலகம் என்றும் புரட்சித் தலைவர் என்றும் அன்புடன் அழைக்கப்படும் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனின் 105வது பிறந்தநாள் விழா இன்று 17ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இவ்விழா மாநில அரசின் சார்பில் கொண்டாடப்பட்டு, எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முன்னாள் முதல்வர் 'பாரத ரத்னா' டாக்டர் எம்.ஜி.ஆரின் 105வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, இன்று காலை 10 மணியளவில் சென்னை, கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப்பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருஉருவச்சிலைக்கு அரசின் சார்பில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, எம்ஜிஆர், ஜெயலலிதாவைப் போல் பொற்கால ஆட்சியை விரைவில் தமிழகத்தில் நிலைநாட்ட சபதம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆட்சிக்கு வந்திருக்கும் ஒரு குடும்ப ஆட்சியை அடியோடு வேரறுக்க அனைவரும் போர்ப்பரணி பாடவேண்டிய நேரம் இது என்றும் அதிமுக தலைவர்கள் தொண்டர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

