சென்னை: சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணியாற்றும் 87 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, இம்மாதம் 31ஆம் தேதி வரை பூங்கா மூடப்படுவதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
பூங்காவில் உள்ள விலங்கு களைப் பாதுகாக்கும் பொருட்டு பூங்கா மூடப்படுவதாக பூங்காவின் இயக்குநர் கர்ண பிரியா தெரிவித்துள்ளார்.
தொற்று உறுதியான 87 பேரும் குறைந்த பாதிப்புடன் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்கள் மூலம் விலங்குகளுக்குத் தொற்று பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பதற்காகவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கர்ண பிரியா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 5 வயதுடைய ஆண் சிங்கம் ஒன்று உயிரிழந்துள்ளது. அது, கொரோனா பாதிப்பினால் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதால், அதன் மாதிரிகள் கொேரானா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, பூங்கா நிர்வாகத்தின் அலட்சியத்தால் பூங்கா ஊழியர்கள் மூலம் பார்வையாளர்களுக்கும் விலங்குகளுக்கும் கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் குடும்பத்துடன் பூங்காவுக்குச் சென்று வந்தவர்கள் இந்தத் தகவலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

