லாரி விபத்து: மது போத்தல்களை அள்ளிச் சென்ற மக்கள்
மிட்டப்பள்ளி: சென்னையில் இருந்து தர்மபுரிக்கு மதுபான போத்தல்களுடன் சென்றுகொண்டிருந்த லாரி ஒன்று, மிட்டப்பள்ளி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையில் கவிழ்ந்ததில் பீர் போத்தல்களில் பெரும்பாலானவை உடைந்து சாலையில் ஆறாக ஓடின.
தனுஷ், 42, என்ற ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவ்வழியாகச் சென்றவர்களும் பொதுமக்களும் லாரியில் மீதமிருந்த பீர் போத்தல்களை அள்ளிக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். காவல்துறை அதிகாரிகள் பொது மக்களை அங்கிருந்து விரட்டினர். உடைந்த மது போத்தல்களின் மதிப்பு ரூ.10 லட்சம் எனக் கூறப்படுகிறது.
திருவள்ளுவர், காமராசர் விருதுகள் அறிவிப்பு
சென்னை: தமிழறிஞா்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் வழங்கப்படும் அய்யன் திருவள்ளுவர், பெருந்தலைவர் காமராஜர் விருது குறித்த அறிவிப்பினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
அய்யன் திருவள்ளுவா் விருது திருச்சியைச் சோ்ந்த மு.மீனாட்சி சுந்தரத்துக்கும், 78, பெருந்தலைவா் காமராஜா் விருது சொல்லின் செல்வா் குமரி அனந்தனுக்கும், 88, வழங்கப்படவுள்ளன. விரைவில் இவ்விருதுகள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யானைகள், குதிரைகளுக்கும் சுவையான பொங்கல் விழா
கோவை: மாட்டுக்கு மட்டும்தானா பொங்கல்? விலங்குகள் அனைத்திற்கும் பொங்கல் உண்டு. நாங்களும் பொங்கல் கொண்டாடுவோம் என யானையும் குதிரையும் பொங்கல் விழாவைக் கொண்டாடி உள்ளன.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருபத்தி ஏழு காட்டு யானைகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், வனத்துறை வாகனத்தில் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்று, யானைப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டுள்ளது.
பழங்குடி மக்கள் புதுப்பானையில் பொங்கல் வைத்து பிள்ளையார் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி, அங்குள்ள வளர்ப்பு யானைகளுக்கு பழம், கரும்பு, சத்து மாவு என பிரசாதங்களை உணவாக அளித்தனர்.
இேதபோல், திண்டுக்கல்லை அடுத்துள்ள சிறுமலை வனக் கிராமங்களில் குதிரைப் பொங்கலை மலைக்கிராம மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இவர்கள், குதிரைகளைத் தெய்வமாகக் கருதி, தங்களது விவசாயப் பணிகளுக்கு உறுதுணையாக இருக்கும் குதிரைகளைக் குளிப்பாட்டி, அலங்காரம் செய்து, மாலை அணிவித்து, சலங்கை கட்டி பொங்கல் வைத்து சாமி கும்பிட்டனர்.
ஊரடங்கு: கட்டுப்பாடுகள் அமல்
சென்னை: கொரோனா, ஓமிக்ரான் கிருமிப்பரவலை அடுத்து ஞாயிறு முழு ஊரடங்கு நேற்று காலையில் அமலுக்கு வந்தது. காய்கறி, மளிகை, இறைச்சி, ஜவுளி, நகைக் கடை, வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை திறக்கப்படவில்லை. மதுக் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது. பொதுப் போக்குவரத்து, மெட்ரோ ரயில் சேவைகளும் இயங்கவில்லை.
குறிப்பிட்ட எண்ணிக்கையில் சென்னை புறநகர் ரயில் சேவைக்கும் உணவகங்களில் 'பார்சல்' சேவைக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தன.
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், தமிழகத்தில் இரண்டாவது வாரமாக நேற்று பொதுமுடக்கம் அமலில் இருந்ததால், தேவையின்றி வெளியே சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தனர்.

