பர்கூர்: தமிழகத்தின் பர்கூர் தொகுதி மக்கள் திருவள்ளுவருக்கு கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர்.
அண்மையில் திருவள்ளுவர் தினத்தையொட்டி அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரை, பேச்சுப் போட்டிகளும் பெண்களுக்கு கோலப் போட்டியும் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பர்கூர் அடுத்துள்ள ஜிஞ்சம்பட்டியில் திருவள்ளுவர் தொண்டு அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதி மக்கள் ஒருங்கிணைந்து திருவள்ளுவர் நலச் சங்கமும் அமைத்துள்ளனர். இந்தச் சங்கத்தின் சார்பாகவே திருவள்ளுவருக்கு கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவரை மூலவராகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இக்கோவிலில், சிறப்பு பூசைகள் செய்து கிராம மக்கள் வழிபடுகின்றனர். சுற்றுவட்டார கிராம மக்களும் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

