சென்னை: ஜல்லிக்கட்டுப் போட்டிகளைச் சிறப்பாக நடத்தியதாக அமைச்சர் பி.மூர்த்திக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பொங்கலையொட்டி முதலில் மதுரையில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து ஜல்லிக்கட்டுகள் எந்தவிதப் பிரச்சினையும் இன்றி நடந்து முடிந்துள்ளது.
இதையடுத்து, பல்வேறு தரப்பினரும் தமிழக அரசுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நிகழ்வை தனியார் தொலைக்காட்சிகளும் நிகழ்வு ஏற்பாட்டாளர்களும் இணையம் வழி நேரலையில் ஒளிபரப்பினர்.
உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் அதைக் கண்டு மகிழ முடிந்தது.
"அமைச்சர் மூர்த்தி கடந்த முப்பது ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு எவ்வாறு நடத்தப்பட்டு வருகிறது என்பதை நன்கு அறிவார்.
"அதனால்தான் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவரால் அனைத்தையும் சிறப்பாக ஏற்பாடு செய்ய முடிந்தது," என அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு வகுத்துள்ள கொரோனா வழிகாட்டி நெறிமுறைகள் அனைத்தையும் பின்பற்றி இம்முறை ஜல்லிக்கட்டு நடந்துள்ளது.
மேலும், நிகழ்வில் பங்கேற்ற காளைகளும் வீரர்களும் இணையம் வழி பெயர்களைப் பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒரு வீரர் ஒரு ஜல்லிக்கட்டில் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டதுடன், வெற்றி பெற்றவர்களுக்கு தங்கக்காசுகள்தான் அதிக அளவில் பரிசுகளாக வழங்கப்பட்டன.
வீரர்களுக்கான பரிசுப் பொருள்கள், காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள், கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தல், நேரடி ஒளிபரப்பு, பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் என அனைத்து ஏற்பாடுகளையும் அமைச்சர் பி.மூர்த்தி முன்னின்று கவனித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கொரோனா காலகட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியதன் மூலம் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் திகழ்கிறது என அமைச்சர் பி.மூர்த்திக்குப் பாராட்டுகள் குவிந்தன.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினும் அமைச்சரை நேரில் வரவழைத்து தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பி.மூர்த்தி, தாம் எப்போதுமே இப்படிச் செயல்படுவதுதான் வழக்கம் என்றும் இம்முறை முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவோடு கூடுதல் உற்சாகத்துடன் ஜல்லிக்கட்டை நடத்தி முடித்துள்ளதாகவும் அது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.

