சென்னை: குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊர்தி நிராகரிக்கப்பட்டது சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள், தமிழக மக்களின் உணர்வுகளை வேதனை அடையச் செய்துள்ளதாக வ.உ.சி.யின் கொள்ளுப் பேத்தி செல்வி தெரிவித்துள்ளார்.
இந்திய விடுதலைக்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்கள், அவர்களது வரலாறுகளை பற்றி அடுத்த தலைமுறையினரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
"மத்திய அரசு இதனை மனதிற்கொண்டு முடிவெடுக்க வேண்டும். சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்கள், வரலாறு அடங்கிய ஊர்திகள் ஆண்டாண்டு காலமாக குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்று வருகின்றன," என்று செல்வி கூறியுள்ளார்.
தமிழகம் சார்பில் அணிவகுப்பில் பங்கேற்க இருந்த ஊர்தியில் நாடு முழுவதும் அறியப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் இல்லை எனக் கூறி நிராகரிக்கப்பட்டதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில், "நாட்டுக்குச் சேவையாற்றிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், நோபல் பரிசு வென்ற ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரின் சிறப்பம்சங்களுடன் மாநில அரசு அலங்கார ஊர்தியை தயார் செய்து இருந்தது," என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல் கேரள அரசின் ஊர்தியில் சங்கராச்சாரியாரின் வாழ்க்கை வரலாறு இடம்பெறாததால் நிராகரிக்கப்பட்டதாக அம்மாநில கல்வி அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்
சென்னை: குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது வேதனை அளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வ.உ.சி, மகாகவி பாரதியார், ராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறுவதற்கு மத்திய அரசு மறுத்திருப்பது ஏமாற்றம் அளிப்பதாக பிரதமருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விஷயத்தில் பிரதமர் உடனடியாக தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அலங்கார ஊர்தி தொடர்பாக மாநில அதிகாரிகள் மூன்று முறை விளக்கம் அளித்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

