கோவை ஜல்லிக்கட்டைக் காண பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை
கோவை: எதிர்வரும் 21ஆம் தேதி கோவையில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் 700 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ளதாக அம்மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவை தெரிவித்துள்ளது. கோவையில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் பார்வையாளர்களுக்கு அறவே அனுமதி இல்லை என அப்பேரவையின் தலைவர் மருதமலை கூறி உள்ளார்.
தமிழகத்தில் 11 மாநகராட்சிகளின் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு
சென்னை: தமிழகத்தில் உள்ள 11 மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாக கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். செங்கல்பட்டு (தாம்பரம்), ஆவடி, கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், விருதுநகர், காஞ்சீபுரம், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய ஒன்பது மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
எருது விடும் விழா: 130 பேர் காயம்
திருப்பத்தூர்: தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற இரண்டு எருது விடும் விழாக்களில் பங்கேற்ற 130 பேருக்கு காயம் ஏற்பட்டது. வெள்ளக்குட்டையில் நடந்த விழாவில் மாடுபிடி வீரர்கள் உட்பட 50 பேர் மாடு முட்டியதில் காயம் அடைந்தனர். இதேபோல் நாட்றாம்பள்ளியில் நடந்த திருவிழாவில் 80 பேர் காயமடைந்தனர்.
ராஜேந்திர பாலாஜியை சந்தித்த ஐந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள்
சிவகாசி: பண மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நீதிமன்றம் மூலம் பிணை பெற்று சிவகாசியில் தங்கியுள்ளார். இந்நிலையில், அவரை தங்கமணி, வேலுமணி, சண்முகம், பாண்டியராஜன், உதயகுமார் ஆகிய ஐந்து முன்னாள் அமைச்சர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர். சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக இந்தச் சந்திப்பு நடைபெற்றதாகவும் அப்போது கட்சி விவகாரங் கள் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுவது அதிமுக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தந்தையிடம் பணம் பறிக்க கடத்தல் நாடகமாடிய மகன் சிக்கினார்
சென்னை: தந்தையிடம் இருந்து பணம் பறிக்க கடத்தல் நாடகமாடிய இளையர் காவல்துறையிடம் வசமாகச் சிக்கினார். சென்னையைச் சேர்ந்த 24 வயதான கிருஷ்ண பிரசாத் என்ற அந்த இளையர் கடந்த 11ஆம் தேதி திடீரென காணாமல் போய்விட்டதாக அவரது தந்தை பென்சிலய்யா (54 வயது) காவல்துறையில் புகார் அளித்தார். காவல்துறை விசாரணையைத் தொடங்கிய நிலையில், பென்சிலய்யாவை கைபேசியில் தொடர்புகொண்ட ஒருவர், அவரது மகனை கடத்தி வைத்திருப்பதாகவும் 30 லட்சம் ரூபாய் கொடுத்தால் விடுவிப்பதாகவும் மிரட்டினார். இதற்குப் பயன்படுத்தப்பட்ட கைபேசி கிருஷ்ண பிரசாத்துடையது என்பதும் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து அழைப்பு வந்தது என்பதும் தெரிய வந்தது. அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கிருஷ்ண பிரசாத்தை மீட்டனர். விசாரணையில், அவருக்கு சரியான வேலை அமையவில்லை என்பதும் அதனால் குறும்படம் தயாரிக்க அவர் விரும்பியதும் தெரிய வந்தது. அதற்கு பணம் தேவைப்படவே நண்பர்களுடன் சேர்ந்து கடத்தல் நாடகத்தை அரங்கேற்றி உள்ளார். இதையடுத்து, காவல்துறையினர் அவரை எச்சரித்தை அனுப்பி வைத்தனர்.

