சென்னை: குடியரசு தினத்தையொட்டி, டெல்லியில் நடைபெற உள்ள அணிவகுப்பில், தமிழக அலங்கார ஊர்தி பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அந்த ஊர்தி சென்னையில் நடைபெறும் அணிவகுப்பில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஆங்கிலேயர்களைத் தீரமுடன் எதிர்கொண்ட தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பைப் பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் நாட்டுப்பற்றிலும் விடுதலை வேட்கையிலும் தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக மாநில அரசின் சார்பில் நடைபெறும் குடியரசு தின கொண்டாட்டத்தில் அந்த அலங்கார ஊர்தி இடம்பெறும் என்று தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும் அந்த அலங்கார ஊர்தி மக்களின் பார்வைக்காக அனுப்பப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தாம் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்துக்குப் பதிலளிக்கும் வகையில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தமக்கு கடிதம் அனுப்பி உள்ளதாகவும் அதில் தமிழக ஊர்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு எந்த காரணங்களும் குறிப்பிடாதது தமக்கு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்துள்ளது என்றும் முதல்வர் கூறியுள்ளார்.
"இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திற்கும் சற்றும் சளைக்காத வகையில், விடுதலைப்போரில் தமிழகம் செய்த 250 ஆண்டு காலத் தொடர் பங்களிப்பு சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமானதாகும்.
"ஆங்கிலேயர்களின் வணிகத்திற்குப் போட்டியாக, சுதேசி கப்பல் கம்பெனி எனும் பெரும் கனவை நெஞ்சில் ஏந்தி, தன் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் இழந்து, ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராகச் செயல்பட்டு இரட்டைத் தீவாந்திர தண்டனை பெற்றவர் வ.உ.சிதம்பரனார்.
"ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் தனது வீரமிக்க கவிதைகளால் விடுதலை வேள்வி செய்தவர் பாரதியார். இத்தகைய விடுதலைப் போராட்டத் தியாகிகளின் பங்களிப்பை நினைவுகூரும் விதமாகத்தான் நமது அலங்கார ஊர்தி வடிவமைக்கப்பட்டு இருந்தது," என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, தமிழக ஊர்தி குடியரசு தின அணிவகுப்பில் புறக்கணிக்கப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா ஆட்சி செய்யாத மாநிலங்களின் ஊர்திகள் புறக்கணிக்கப்பட்டு இருப்பது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல என்று அவர் கூறியுள்ளார்.

