மதுரை: விஜயநகரப் பேரரசர் மன்னர் திருமலை நாயக்கரின் 439ஆவது பிறந்த நாள் விழா நேற்று முன்தினம் மதுரையில் சிறப்பாக நடைபெற்றது.
மதுரை திருமலை நாயக்கர் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் மாமன்னர் திருமலை நாயக்கர் சிலைக்கு மங்கல இசையுடன் சீர்வரிசை கொண்டுவரப்பட்டது. பின்னர் பால், சந்தனத்தைக் கொண்டு பூசை நடத்தப்பட்டது.
குறிப்பாக, பண்டைய கால முறைப்படி மன்னர்களுக்கு வழங்கப்படும் மரியாதைகள் செய்யப்பட்டு மாமன்னர் திருமலை நாயக்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
டெல்லி சுல்தான், முகலாய மன்னர்கள் தமிழகத்தை நோக்கிப் படையெடுத்து வந்தபோது, அவர்களின் படைகளைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு விரட்டியடித்து வரலாற்றில் இடம்பெற்றவர் திருமலை நாயக்கர்.
மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த விஜயநகரப் பேரரசர்களில் ஆகச்சிறந்த இடத்தைப் பெற்றவர் மாமன்னர் திருமலை நாயக்கர். கி.பி. 1623 முதல் 1659ஆம் ஆண்டு வரை கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக தனது ஆளுகைக்கு கீழ் அனைத்துப் பகுதிகளையும் கட்டிக்காத்தவர் இவர் என்று நிகழ்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

