சென்னையில் மீண்டும் கட்டுப்பாட்டுப் பகுதிகள்

சென்னையில் மீண்டும் கட்டுப்பாட்டுப் பகுதிகள்

3 mins read
87ab3baa-e133-481e-9769-e8d001d5c20d
-

387 தெருக்களில் தடுப்புக் கம்பி வேலிகள் அமைப்பு: வாகனங்களுக்குத் தடை

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்­டும் அதி­க­ரித்து வரும் நிலை­யில், மாநி­லத்­தின் பல்­வேறு மாவட்­டங்­களில் கட்­டுப்­பா­டு­கள் அதி­க­ரித்­துள்­ளன.

குறிப்­பாக, சென்­னை­யில் மீண்டும் கொரோனா கட்­டுப்­பாட்டு பகு­தி­கள் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளன.

அண்­மைய சில தினங்­க­ளாக சென்­னை­யில் தொற்று பாதிப்பு அதி­க­ரித்து வரு­கிறது. இதை­யடுத்து, தொற்­றுப் பர­வல் அதி­க­மாக உள்ள இடங்­க­ளைக் கட்டுப்­பாட்­டுப் பகுதி­க­ளாக சென்னை மாந­க­ராட்சி அறி­வித்­துள்­ளது.

சென்னை மாந­க­ராட்­சி­யில் 15 மண்­ட­லங்­கள் உள்­ளன. அவற்­றுள் தேனாம்­பேட்டை, கோடம்­பாக்­கம், அடை­யார், அண்­ணா­ந­கர் ஆகிய நான்கு மண்­ட­லங்­களில் தொற்­றுப் பர­வல் அதி­க­மாக உள்­ளது தெரிய வந்­தி­ருக்­கிறது.

இப்­ப­கு­தி­களில் தொற்­றுக்­கான அறி­கு­றி­கள் உள்­ள­வர்­கள் உட­ன­டி­யாக சிகிச்­சைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­கி­றார்­கள். தொற்று உறு­தி­யா­கும் பட்­சத்­தில் லேசான அறி­கு­றி­கள் மட்­டுமே இருப்­பின் அவர்­கள் தங்­கள் வீட்­டி­லேயே ஏழு நாள்­க­ளுக்குத் தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றார்­கள். அவர்­க­ளைக் கண்­கா­ணிக்­க­வும் மருத்­துவ ஆலோ­சனை வழங்­க­வும் மருத்­து­வக்­கு­ழுக்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. மேலும், மற்ற உத­வி­க­ளுக்­காக களப்­ப­ணி­யா­ளர்­களும் உள்­ள­னர்.

சென்­னை­யில் தொற்­றுக்கு ஆளா­ன­வர்­கள் வசிக்­கும் வீடு­க­ளுக்கு வெளியே 'ஸ்டிக்­கர்'கள் ஒட்­டப்­ப­டு­கின்­றன. அதில், பாதிப்­புக்கு ஆளா­ன­வர்­க­ளின் பெயர்­கள் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றன.

நேற்று முன்­தி­னம் மாலை வரை­யி­லான நில­வ­ரப்­படி, சென்­னை­யில் 58 ஆயி­ரம் பேருக்கு கிருமி தொற்­றி­யுள்­ளது. அவர்­களில் சுமார் 71 விழுக்­காட்­டி­னர் வீடு­க­ளி­லேயே தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர் என்­றும் மற்­ற­வர்­கள் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­வ­தா­க­வும் மாந­க­ராட்சி தெரி­வித்­துள்­ளது.

சென்­னை­யில் சுமார் 39 ஆயி­ரம் தெருக்­கள் உள்­ளன. அவற்­றுள் தொற்று பாதிப்பு அதி­கம் உள்ள தெருக்­கள் அடை­யா­ளம் காணப்­பட்டு, கட்­டுப்­பாட்­டுப் பகு­தி­க­ளாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளன. ஒரே தெரு­வில் பத்­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் தொற்­றுக்கு ஆளாகி இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டால் அந்­தத் தெரு மூடப்­ப­டு­கிறது.

அந்த வகை­யில், சென்னையில் தற்­போது 387 தெருக்­கள் கட்­டுப் பாட்டு பகு­தி­க­ளாக அறி­விக்­கப்­பட்டு மூடப்­பட்­டுள்­ளன. அந்த தெருக்­களில் வாக­னங்­கள் செல்ல தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

தடுப்­புக் கட்­டை­கள், வேலி­கள் அமைக்­கப்­பட்டு பொது­மக்­க­ளின் நட­மாட்­டம் வெகு­வா­கக் கட்­டுப்­படுத்­தப்­பட்­டுள்­ளது.

தினமும் 40,000 தொலைபேசி அழைப்புகள்

சென்­னை­யில் வீட்­டுத்­த­னி­மை­யில் உள்­ள­வர்­களை மருத்­து­வக் குழு­வி­னர் தொலை­பேசி வழி தொடர்­பு­கொண்டு ஆலோ­சனை வழங்கி வரு­வ­தாக மாந­க­ராட்சி ஆணை­யர் ககன்­தீப் சிங் பேடி தெரி­வித்­துள்­ளார். தின­மும் அதி­க­பட்­ச­மாக 40,000 அழைப்­பு­கள் வரு­வ­தா­க­வும் நோயா­ளி­க­ளுக்கு உரிய ஆலோ­ச­னை­கள் வழங்­கப்­ப­டு­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

உயிர்வாயு தேவைப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இதற்­கி­டையே, தமி­ழக மருத்­து­வ­ம­னை­களில் உள்ள தீவிர சிகிச்­சைப் பிரி­வு­களில் அனு­ம­திக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை கடந்த இரண்டு வாரங்­களில் இரு­ம­டங்­காக அதி­க­ரித்­துள்­ளது.

அதே­போல் உயிர்­வாயு தேவைப்­ப­டு­வோர் எண்­ணிக்­கை­யும் நான்கு மடங்­காக அதி­க­ரித்­துள்­ளது என சுகா­தா­ரத்­துறை தெரி­வித்­துள்­ளது.

சென்னை, கோவை, சேலம், மதுரை, வேலூர் ஆகிய ஐந்து மாவட்­டங்­க­ளில்­தான் உயிர்­வாயு தேவைப்­படும் நோயா­ளி­கள் அதிக அள­வில் உள்­ள­னர்.

இம்­மா­தம் 1ஆம் தேதி மாநி­லம் முழு­வ­தும் மருத்­து­வ­ம­னை­யில் தொற்றுப் பாதிப்­புக்கு சிகிச்சை பெற்று வந்த 8,340 பேரில் 366 பேர் மட்­டுமே தீவிர சிகிச்­சைப் பிரி­வில் இருந்­த­னர்.

இந்­நி­லை­யில், கடந்த 17ஆம் தேதி­யன்று கொரோனா பாதிப்­புக்கு சிகிச்சை பெறும் நோயா­ளி­கள் எண்­ணிக்கை 152,348ஆக அதி­க­ரித்த நிலை­யில், தீவிர சிகிச்­சைப் பிரி­வில் இருப்­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை 814ஆக கூடி­யுள்­ளது.

அதே­போல் ஜன­வரி 1ஆம் தேதி உயிர்­வாயு தேவைப்­ப­டு­வோர் எண்­ணிக்கை 1,392ஆக இருந்த நிலை­யில், 17ஆம் தேதி நில­வ­ரப்­படி, அந்த எண்­ணிக்கை 4,013ஆக அதி­க­ரித்­துள்­ளது.