கழிவறையைக் கழுவ மாணவர்களை வற்புறுத்திய தலைமை ஆசிரியை கைது
திருப்பூர்: மாணவ, மாணவியரைக் கழிவறையை சுத்தப்படுத்த வற்புறுத்திய புகாரின் பேரில், திருப்பூர் மாவட்டம் இடுவாய் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியையை காவல்துறை நேற்று முன்தினம் கைது செய்துள்ளது. 45 வயதான கீதா என்ற அவர், மாணவர்களை சாதியின் பெயரைக் குறிப்பிட்டு கடிந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களை மட்டும் கழிவறையை கழுவ வைத்ததாக கல்வித்துறை அதிகாரியிடம் பெற்றோர் சிலர் புகார் அளித்ததை அடுத்து, அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நடுவானில் மாரடைப்பு: துபாயில் இருந்து சென்னை வந்தவர் மரணம்
சென்னை: துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த 47 வயதான பஷீர் மாரடைப்பால் நடுவானில் உயிரிழந்தார். நாகூரைச் சேர்ந்த அவர், நடுவானில் திடீரென நெஞ்சுவலியால் துடித்ததை அடுத்து, விமானப் பணிப்பெண்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதை யடுத்து, சென்னை விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மருத்துவக்குழுவை தயார்நிலையில் இருக்கும்படி விமானி கேட்டுக்கொண்டார். எனினும், விமானம் தரையிறங்கிய பின்னர் பஷீரை பரிசோதித்த மருத்துவக் குழு அவர் முன்பே இறந்துவிட்டதாக தெரிவித்தது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடை விதிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதை அவசர வழக்காகக் கருதி, இன்று உயர் நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. இதற்கிடையே, தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தலை நடத்த வேண்டும் எனப் பெரும்பாலான கட்சிகள் மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி உள்ளன.
மறைந்த கலைஞர்களின் வாரிசுகளுக்கு குடும்பப் பராமரிப்பு உதவித்தொகை
சென்னை: தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில் மறைந்த கலைஞர்களின் 15 வாரிசுதாரர்களுக்கு குடும்பப் பராமரிப்பு உதவித் தொகையாக தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இத்தொகையை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர்களுக்கு தமிழக அரசு தேவையான உதவிகளை வழங்கும் என்று தெரிவித்ததாக அம்மன்றத்தின் தலைவரும் நடிகருமான வாகை சந்திரசேகர் கூறினார்.
யுடியூப்பில் தேவையற்ற காணொளிகள்: அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
மதுரை: யுடியூப் தளத்தில் தேவையற்ற காணொளிப்பதிவுகள் இடம்பெறுவதாக கூறப்படுவது தொடர்பில், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கு ஒன்றின் விசாரணையின்போது யுடியூப் தளத்தில் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்பது போன்ற காணொளிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தேவையற்ற பதிவுகளைத் தடுக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்து தமிழக அரசு உரிய பதில் அளிக்க வேண்டும் என வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், ஒருவர் தவறு செய்ய துணைபுரிந்தால் சட்டப்படி யுடியூப் தளமும்கூட குற்றவாளிதான் என்று அவர் கூறியுள்ளார்.
வாடகைத் தாயாக இருக்கச் சொல்லி பண மோசடி: இளம்பெண் புகார்
சென்னை: வாடகைத் தாயாக இருந்தால் ஐந்து லட்சம் ரூபாய் தருவதாக வாக்குறுதி அளித்த தனியார் மருத்துவமனை தம்மை ஏமாற்றிவிட்டதாக சென்னை காவல்துறையில் 24 வயது பெண் புகார் அளித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அவரிடம், தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் முரளி என்பவர், வாடகைத் தாயாக இருந்து குழந்தை பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. இதை நம்பி தாம் அந்தத் தனியார் மருத்துவமனைக்குச் சென்றபோது ஆண் குழந்தை பெற்று தந்தால் நான்கு லட்சம் ரூபாயும் இரட்டை குழந்தை என்றால் ஐந்து லட்சம் ரூபாயும் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்துகொண்டதாகவும், எனினும் ஒப்பந்தப்படி தமக்கு தர வேண்டிய தொகையைத் தரவில்லை என்றும் அந்தப் பெண் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

