செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
394d8c89-3dca-4181-97cd-72b228c3727e
-

மநீம இரண்டாம் பட்டியல் வெளியீடு

சென்னை: நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இத்தேர்தலில் போட்டியிட உள்ள இரண்டாவது வேட்பாளா் பட்டியலை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். மதுரை மாநகராட்சி வார்டுகளுக்கு 33 பேர்; சென்னை மாநகராட்சிக்கு 13 பேர்; ஆவடி மாநகராட்சிக்கு இருவர்; போடி நகராட்சிக்கு மூவரையும் வேட்பாளர்களாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

சக்கரபாணி: தரமற்ற பொருள்களை விநியோகித்தோர் மீது நடவடிக்கை

சென்னை: பொங்கல் பரிசுத்தொகுப்பில் அனைத்துப் பொருள்களையும் தரமாக வழங்கவேண்டுமென அதிகாரிகளை வலியுறுத்தி இருந்தோம். இருப்பினும், ஒருசில இடங்களில் பூச்சி பிடித்த மாவு, ஒழுகும் நிலையில் வெள்ளம் என தரமான பொருள்களுக்குப் பதிலாக தரமற்ற பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்குக் காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக உணவுத்துறை அமைச்சா் ஆா்.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களுக்கு கிருமி பாதிப்பு

மதுரை: தமிழக அமைச்சர்கள் மூர்த்தி, ராமச்சந்திரன் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வணிகவரித்துறை அமைச்சரான மூர்த்திக்கு சற்று மிதமான அளவில் பாதிப்புகள் இருப்பது தெரிய வந்ததால், அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதேபோல், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து, அவர் நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

புதிதாக 28,561 பேருக்கு பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 28,561 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 7,520 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 39 போ் பலியாகியதை அடுத்து நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,112ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் பரிசோதனைகளை அதிகரிக்குமாறு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

சடலத்தை அடக்கம் செய்த பெண்கள்

கலசப்பாக்கம்: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே இரு தரப்பினருக்கு இடையே அண்மையில் சண்டை மூண்டதில் ஒரு தரப்பைச் சேர்ந்த ஆண்கள் தலைமறைவாக உள்ளனர். இந்நிலையில், கடந்த 19ஆம் தேதி அப்பகுதியைச் சேர்ந்த கருப்பாயி, 75, என்பவர் உயிரிழந்தார். அவரை அடக்கம் செய்ய ஊரில் ஆண்கள் யாரும் இல்லாததால், அவரது மகன் பொன்னுசாமி மட்டும் பங்கேற்க, பெண்களே இறுதிச் சடங்குகள் செய்து, பெண்களே சடலத்தை தோளில் சுமந்து, மயானத்துக்கு எடுத்துச்சென்று அடக்கம் செய்தனர். படம்: ஊடகம்