சிங்கார சென்னை: வழி தவறிய குழந்தை

கொரோனா கால­கட்­டத்­தில் சென்னை நிறைய மாறி­விட்­டது. சென்­னை­வா­சி­களும் மாறி­விட்ட­னர். ஆனால், வழிதவறிய குழந்தை யைப் போல் தவிப்பில் உள்ளனர்.

சிங்­கா­ரச் சென்­னை­யின் சாமா­னி­யர்­கள் முதல் செல்­வந்­தர்­கள் வரை அனை­வ­ரை­யும் அசைத்­துப் பார்த்­து­விட்­டது கொரோனா.

காலை­யில் பர­ப­ரப்பு, மாலை­யில் பொழு­து­போக்கு என்­ப­து­தான் கொரோ­னா­வுக்கு முந்­தைய சென்னை மக்­க­ளின் அன்­றாட வாழ்க்­கை­முறை. மெரினா கடற்­கரை, பூங்­காக்­கள், திரை­யரங்கு­கள், வழி­பாட்­டுத் தலங்­கள் என்று சுழற்சி முறை­யில் வாரந்­தோ­றும் தனித்தோ குடும்­பத்­து­டனோ பொழு­தைக் கழிப்­ப­து­தான் சென்னை­வா­சி ­களின் வழக்­கம்.

தெரு­வுக்­குத் தெரு துரித உண­வ­கங்­கள், பெட்­டிக்­க­டை­கள், சந்­தை­கள், தள்­ளு­வண்­டி­கள், எங்­கும் மக்­கள் கூட்­டம் என்று சென்னை என்­றாலே எப்­போ­தும் பர­ப­ரப்­பு­தான். சென்­னை­வா­சி­களும் இதைத்­தான் விரும்­பி­னர். இது இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்பு வரை நில­விய காட்சி.

ஆனால், ‘இதெல்­லாம் கூடாது’ என்று முட்­டுக்­கட்­டை போட்­டி­ருக்­கிறது கொரோனா கிருமி.

கொரோனா கிருமி தொடர்­பான பயம் இப்­போது மக்­கள் மத்­தி­யில் சலிப்­பாக மாறி­விட்­டது. ‘அட போங்­கப்பா... அது­வும் (கொரோனா) நம்­மு­டன் இருந்­து­விட்­டுப் போகட்­டும்...’ என்று மக்­கள் பேசத் தொடங்­கி­விட்­ட­னர்.

கடந்த இரண்டு ஆண்­டு­களில் சென்­னை­யில் சமூக, பொரு­ளி­யல் கட்­ட­மைப்­பு­கள் ஆட்­டங்­கண்­டுள்ளன. சாலை­யோர வியா­பா­ரி­கள் முதல் பெரிய நிறு­வ­னங்­கள் வரை பார­பட்­சம் இன்றி அனை­வ­ரை­யும் புலம்ப வைத்­துள்­ளது கொரோனா தொற்று.

இந்­நி­லை­யில், கொரோனா கிருமி இம்­மா­ந­க­ரத்­தில் ஏற்­படுத்தி உள்ள தாக்­கம் இன்­னும் சில ஆண்­டு­கள் நீடிக்­கும் என்­ப­தில் எந்­த­வி­தச் சந்­தே­க­மும் இல்லை. ஏனெ­னில், பணப்­பு­ழக்­கம் மீண்டும் பழைய நிலைக்­குத் திரும்ப சில காலம் ஆகும் என்­கி­றார்­கள் பொரு­ளி­யல் நிபு­ணர்­கள்.

“பணப்­பு­ழக்­கம் இருந்­தால்­தான் தொழில் வளர்ச்சி உண்­டா­கும். தனி நபர் முதல் நிறு­வ­னங்­கள் வரை கடன் பெற்று முத­லீடு செய்­வ­து­தான் பண சுழற்­சிக்­குக் கைகொ­டுக்­கும். வங்­கிகள் கடன் தர தயங்குகின்றன.

“கட­னைத் திருப்­பிச் செலுத்­து­வ­தற்­கான உத்­த­ர­வா­தத்­தை­யும் அதற்­கான மூல ஆதா­ரங்­க­ளை­யும் பல நிறு­வ­னங்­களால் முன்­வைக்க இய­ல­வில்லை,” என்­கி­றார் வங்­கிச் சேவை ஆலோ­ச­க­ரான ஸ்ரீனி­வா­சன்.

பண சுழற்சி இல்­லா­த­தால் அனைத்து தொழில் நட­வ­டிக்­கை­களும் நிலை­குத்தி உள்­ள­தா­கச் சுட்­டிக்­காட்­டும் இவர், தொழில் நட­வ­டிக்­கை­கள் வேக­மெ­டுக்­கா­மல் பொரு­ளி­யல் மீட்சி என்­பது சாத்­தி­ய­மல்ல என்­கி­றார்.

சென்­னை­யில் கல்­வித்­துறை பெரும் வீழ்ச்­சி­யைச் சந்­தித்­துள்­ளது என்­கி­றார் கல்வி நிறு­வ­னம் நடத்தி வரும் திரு.ரகு­நா­தன்.

“தொழி­லில் லாபம் பார்க்க வேண்­டும் என்ற இலக்கு, ஆசை எல்­லாம் போய்­விட்­டது. நஷ்­டம் ஏற்­ப­டா­மல் இருந்­தாலே போதும் என்று கடந்த ஆண்டு நினைத்­தேன். இப்­போதோ தொழி­லில் நீடித்­தி­ருப்­பதே பெரும் சவா­லாக உள்­ளது.

“மீண்­டும் முடக்­க­நிலை அறி­விக்­கப்­ப­டுமோ என்ற அச்­சத்­தில் கல்­விக்­கட்­ட­ணம் செலுத்த மாண­வர்­கள் விரும்­ப­வில்லை. இணை­யம் வழி பாடங்­கள் நடத்­தப்­ப­டு­வதை பெற்­றோர் ஏற்­க­வில்லை,” என்­கிறார் ரகு­நா­தன்.

சிறிய, நடுத்­தர வணிக நிறு­வ­னங்­கள் ஊதி­யம் வழங்க முடி­யா­த­தால், ஆட்­கு­றைப்பு செய்­துள்­ளன. அலு­வ­லக வாட­கை­யைக் கூட செலுத்த முடி­யாத நிலை­யில், அது அமைந்­துள்ள கட்­டட உரி­மை­யா­ள­ரையே, தொழி­லில் பங்­கு­தா­ர­ரா­கச் சேர்த்­துக்­கொள்­ளும் நிலை­யும் ஏற்­பட்­டுள்­ளது.

கடந்த சில ஆண்­டு­களில் வட இந்­தி­யா­வில் இருந்து லட்­சக்­க­ணக்­கா­னோர் வேலை வாய்ப்பு தேடி தமி­ழ­கம் வந்­துள்­ள­னர். அவர்­களில் பெரும்­பா­லா­ன­வர்­களை முத­லில் அர­வ­ணைத்­தது சென்னை­தான்.

முன்பு சென்­னை­யில் உள்ள உண­வ­கங்­கள், தங்­கு­வி­டு­தி­களி­லும் கட்­டு­மா­னப் பணி­கள் நடக்­கும் இடங்­க­ளி­லும் வடஇந்­திய தொழி­லா­ளர்­கள்­தான் நிறைந்து காணப்­பட்­ட­னர்.

இப்­போது அவர்­களில் 90 விழுக்­காட்­டி­னர் சொந்த ஊர் திரும்­பி­விட்­ட­னர். ஊதி­யம் வழங்­கப்­ப­டா­த­தால் அவர்­க­ளால் தாக்­குப்­பி­டிக்க முடி­ய­வில்லை. இத­னால் பெரும்­பா­லான உண­வ­கங்­கள் ஆள் பற்­றாக்­கு­றை­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

சென்­னை­யில் வாட­கைக்கு வீடு கிடைப்­பது குதி­ரைக்­கொம்பு என்று கூறப்­பட்ட நிலை மாறி, இன்று திரும்­பிய பக்­கம் எல்­லாம் ‘வாட­கைக்கு - டு லெட்’ (TO LET) என்ற அறி­விப்­பைக் காண முடி­கிறது.

பிற மாவட்­டங்­களில் இருந்து சென்­னைக்கு படை எடுத்த நிலை மாறி, ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் சென்­னை­யில் இருந்து வெளி­யே­றி­விட்­ட­னர். சென்­னை­யின் எல்­லைப் பகு­தி­யில் அமைக்­கப்­பட்­டுள்ள சுங்­கச்­சா­வ­டி­களில் ஒரு­மணி நேரம் காத்­தி­ருந்­தால், வீட்­டுச் சாமான்­க­ளு­டன் நகரை விட்டு வாக­னங்­களில் வெளி­யே­றும் சில குடும்­பங்­க­ளை­யா­வது பார்க்க முடி­கிறது.

சினி­மா­தான் தமி­ழர்­க­ளின் முக்­கிய பொழு­து­போக்கு என்று கூறப்படுவதுண்டு. ஆனால், இந்த ஆண்டு பொங்­கல் பண் டிகை­யை­யொட்டி வெளி­யான திரைப்­ப­டங்­களைத் திரை­ய­ரங்­கில் சென்று பார்க்க மக்­கள் ஆர்­வம் காட்­ட­வில்லை.

“குறிப்பிட்ட ஒரு படத்தைக் காணச் சென்றபோது, திரை­ய­ரங்கில் ஒரு­வர்­கூட இல்லை. குறைந்­த­பட்­சம் ஐந்து டிக்­கெட்டு­கள் விற்­ப­னை­யானால்­தான் படம் திரை­யிடப்­படும் என்றனர். அதனால் நானே ஐந்து டிக்­கெட்டு­களை வாங்கி படம் பார்த்­தேன். சென்னை­யில் இவ்வாறு நடந்­தது என்று சொன்­னால் பலரால் நம்ப முடி­யாது,” என்­கி­றார் தமிழ்த் திரை­யு­ல­கின் முக்­கிய மக்­கள் தொடர்­பா­ளர் ஒரு­வர்.

சென்னை மக்­கள், கடந்த மாதம் பெய்த கன­ம­ழையை வாழ்­நாள் முழு­வ­தும் மறக்­க­மாட்­டார்­கள். ஒட்­டு­மொத்த மாந­க­ரை­யும் புரட்டிப்­போட்டு வேடிக்கை பார்த்­தது வெள்­ளப் பெருக்கு.

சென்­னை­யில் உள்ள நுங்­கம்­பாக்­கம் வசதி படைத்­த­வர்­கள் குடி­யி­ருக்­கும் பகுதி. அங்கே ‘லேக் ஏரியா’வைப் பார்க்­க­லாம். ஆனால் ‘லேக்’ எங்கே போனது?

“சேத்­துப்­பட்டு பகு­தி­யில் ஆகச் சிறிய ஏரியை பார்க்க முடி­யும். அது தற்­போது சுற்­று­லாத் தல­மாக மாறி­விட்­டது. இந்­தச் சிறிய ஏரி­தான் கடந்த 1950ஆம் ஆண்டு வரை சென்­னை­யின் கோடம்­பாக்­கம் மேம்­பா­லம், தி.நகர் வடக்கு உஸ்­மான் சாலை, தேனாம்­பேட்டை வரை நீண்­டி­ருந்­தது.

“ஆனால் அர­சாங்­க­மும் மக்களும் சேர்ந்து ஏரி மீது ஏறி வீடு­க­ளை­யும் கட்­ட­டங்­க­ளை­யும் கட்டி அதை விழுங்­கி­விட்­ட­னர். மது­ரை­யில் உல­க­நேரி கண்­மாயைத் தூர்த்­துத்­தான் உயர்­நீ­தி­மன்ற கிளைக்­கான கட்­ட­டம் எழுப்­பப்­பட்­டது என்பது மற்றொரு வேடிக்கை,” என்­கி­றார் மூத்த செய்­தி­யா­ளர் இரா.த.சக்­தி­வேல்.

தொற்று பாதிப்பு ஓர­ளவு கட்டுக்­குள் வந்­ததை அடுத்து, மக்­கள் மீண்­டும் இயல்­பு­நி­லைக்குத் திரும்­பத் தொடங்­கிய நிலை­யில், ஓமிக்­ரான் என்ற புதிய அச்­சு­றுத்­த­லும் திடீர் பெரு­மழை, வெள்­ளப்­பெ­ருக்­கும் கூட்­டணி அமைத்து சென்னை மக்­க­ளின் நம்­பிக்கையைச் சிதைத்து விட்டன.

தொடர் மழை­யால் இம்­மு­றை­யும் சென்­னை­யில் ஆயி­ரக்­க­ணக்­கானோர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். வீட்டு வாடகை செலுத்த முடி­யா­மல் பலர் வசிக்க இட­மின்றி நகரை விட்டு வெளி­யேறி உள்­ள­னர்.

சிறு, குறு வணி­கங்­கள், தொழில்­கள் முடங்­கி­யதை அடுத்து, லட்­சக்­க­ணக்­கா­னோர் வேலை வாய்ப்­பு­களை இழந்­துள்­ள­னர். தனி நபர்­கள் மட்­டு­மல்­லா­மல், தமிழக அர­சாங்­க­மும் கூட போதிய நிதி­யும் கடன் வாங்க வழி­யும் இன்றி தவிப்­ப­து­தான் உண்மை நிலை.

தமி­ழ­கத்­தில் புதிய ஆட்சி அமைந்­தி­ருப்­ப­தால் நடப்பு அர­சாங்­கத்தை அதற்குள்ளாகக் குறை­கூற முடி­யாது என்று ஒரு­தரப்­பி­னர் கூறு­கின்­ற­னர்.

இன்­னொரு தரப்போ, அர­சாங்­கம் நினைத்­தால் பல லட்ச குடும்­பங்­களின் அவ­தி­யைப் போக்க முடி­யும் என்­கிறது. இத்­த­கைய வாதங்­கள், விமர்­ச­னங்­கள், கருத்­து­கள் ஒரு­பக்­கம் ஒலித்­துக் கொண்­டி­ருக்க, மறு­பக்­கம் கொரோனா தன் ஆட்டத்தை தொடர்­கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!