தொல்லியல் அறிஞர் நாகசாமி மறைவு
சென்னை: தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு நூல்களை எழுதிய ஆர். நாகசாமி, 92, (படம்) உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார். அவரது மறைவுக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சேக்கிழாரின் பெரியபுராணம் வரலாற்றுப் பாதை குறித்த ஆய்வுப் பணிக்காக தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்ற இவருக்கு கடந்த 2018ஆம் ஆண்டு பத்மபூஷண் விருதும் வழங்கப் பட்டது. சென்னை பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத மொழியில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்த இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கடனை அடைக்க குழந்தை விற்பனை
திருச்சி: சூதாட்டத்திற்கு அடிமையான அன்றாட கூலித் தொழிலாளியான அப்துல் சலாம் என்பவர், ஏற்கெனவே தனக்கு நான்கு குழந்தைகள் உள்ள நிலையில், இரண்டு மாதத்துக்கு முன்பு பிறந்த தனது 5வது குழந்தையை ரூ.50,000க்கு விற்பனை செய்து தனது சூதாட்டக் கடனை அைடத்துள்ளார். பெற்ற குழந்தையை விற்றது குறித்து, அவரது மனைவி கயிருன்னிஷா அளித்த புகாரை அடுத்து, அப்துல் சலாம், சந்தனகுமார், ஆரோக்கியராஜ் ஆகிய மூவரையும் காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
மாணவர் உடல் ஒப்படைப்பு
தேனி: பிலிப்பீன்ஸ் நாட்டில் உயிரிழந்த தேனி மாவட்டம், ராசிங்கபுரத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவரின் உடல் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் உதவியுடன் தமிழகம் கொண்டுவரப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 15ஆம் தேதி அருவியில் குளிக்கச் சென்றபோது மாணவர் சஷ்டிகுமார் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மாணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர உதவுமாறு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
1,000 ரூபாயில் விமானப் பயணம்
சென்னை: நாளை நடைபெற உள்ள குடியரசு தின விழாவை முன்னிட்டு, கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம் ரூ.1,000 கட்டணத்துக்குள் ஒரு வழிப் பயண டிக்கெட்டுகளை விற்பனை செய்கிறது. இந்தச் சலுகையை உள்நாட்டுப் பயணத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் ெதரிவித்துள்ளது.
'ரைட் டு ஃபிளை' எனப்படும் இச்சலுகையின் கீழ் ரூ.926ல் இருந்து விமான டிக்கெட் கட்டணம் தொடங்குகிறது. ஜனவரி 26ஆம் தேதிக்குள் டிக்கெட்டை பதிவு செய்துவிட வேண்டும். பிப்ரவரி 11 முதல் மார்ச் 31ஆம் தேதி வரையிலும் விமான டிக்கெட்டுகளைப் பதிவு செய்யலாம்.
ஆற்றைக் கடக்க மக்களுக்குப் படகு வாங்கித் தந்த விஜய் வசந்த்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், விளாத்திவிளை பகுதியில் ஆற்றின் ஒரு கரையில் இருந்து மறுகரைக்குச் செல்வதற்காக பொதுமக்களுக்கு விஜய் வசந்த் எம்.பி. தனது சொந்த செலவில் படகு வாங்கிக் கொடுத்துள்ளார். "இங்கிருந்த பழைய படகு நாசமாகிவிட்டதாக பொதுமக்கள் கூறியதை அடுத்து, எனது சொந்த செலவில் படகு ஒன்றை வாங்கி, மக்களுக்கு அர்ப்பணித்துள்ளேன். எனது தந்தை கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்யவேண்டும் என நினைத்தார். தந்தையின் வழியைப் பின்பற்றி மக்களுக்கு உதவிகள் செய்வதில் பெருமிதம் கொள்கிறேன்," என்றார் விஜய் வசந்த்.

