நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் அறிக்கை அளித்தது நிபுணர் குழு
சென்னை: பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சென்னையில் சேதமடைந்த நிலையில் உள்ள சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இடிக்கப்பட உள்ளன. அரசு அமைத்துள்ள வல்லுநர் குழு இதற்கான பரிந்துரையை அளித்துள்ளது.
தமிழக அரசு இதை ஏற்கும் பட்சத்தில் 20,453 குடியிருப்புகள் இடிக்கப்படும் என ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதியன்று சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 24 வீடுகள் தரைமட்டம் ஆயின. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அந்தக் குடியிருப்பில் உள்ள 336 வீடுகளில் சுமார் இரண்டாயிரம் பேர் வசித்து வந்தனர்.
எனினும், கட்டடத்தின் பல்வேறு பகுதிகளில் பெரிய அளவிலான விரிசல்கள் ஏற்படவே, பலரும் அச்சமடைந்தனர். அதன் எதிரொலியாக ஏராளமானோர் அங்கு வசிப்பது ஆபத்து எனக் கருதி, முன்கூட்டியே அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.
இதனால் கட்டடம் இடிந்து விழுந்தற்போது யாரும் உயிரிழக்கவில்லை. டிசம்பர் மாதம் 24 வீடுகள் மட்டுமே இடிந்துவிழுந்தன. இதையடுத்து, அங்குள்ள மற்ற கட்டடங்களை ஆய்வு செய்ய முடிவானது. அந்தக் கட்டடங்களில் சுமார் 17,734 வீடுகள் உள்ளன.
இந்நிலையில், தமிழ்நாடு நகர்ப்புற வசிப்பிட மேம்பாட்டு வாரியத்தின் (குடிசை மாற்று வாரியம்) மேலாண்மை இயக்குநர் எம்.கோவிந்தராவ் பொதுமக்களின் பாதுகாப்பு, அவசர நிலை கருதி, ஐந்து தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுக்களை நியமித்தார்.
அதன் பின்னர் அண்ணா பல்கலைக்கழக மண்ணியல், கட்டடவியல் குழு அக்குறிப்பிட்ட கட்டடப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். கட்டட இடிபாடுகளில் இருந்து பெறப்பட்ட மணல் மாதிரி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதன் முடிவில் தமிழக அரசிடம் ஆய்வறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
அதில், சென்னையில் சேதம் அடைந்த நிலையில் உள்ள 20,453 வீடுகளை இடிக்க வேண்டும் என்றும் தேவைப்பட்டால் மறுகட்டுமானம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் விரைவில் முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.

