சென்னை: டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தி பங்கேற்க அனுமதி வழங்க உத்தரவிட வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த ஆண்டு நேரப்பற்றாக்குறை, பாதுகாப்பு பிரச்சினை காரணமாக டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் 12 அலங்கார ஊர்திகள் மட்டுமே பங்கேற்கும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னதாக, தமிழக அலங்கார ஊர்தி இந்த அணிவகுப்பில் பங்கேற்காது என அறிவிக்கப்பட்டது.
இதற்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக ஊர்திக்கு அனுமதி அளிக்கும்படி கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார்.
எனினும் அவரது இந்த கோரிக்கை மத்திய அரசால் ஏற்கப்படவில்லை.
இதனால் தமிழக மக்களின் உணர்வுகள் புண்பட்டுள்ளதாக தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார் சென்னையை சேர்ந்த பி.பாபு.
இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, அலங்கார ஊர்திக்கு அனுமதி கோரிய விண்ணப்பம், நிராகரித்த உத்தரவு நகல் உள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு எழுத்துபூர்வமான உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என்று குறிப்பிட்ட மனுதாரர் தரப்பு, இது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் அனுப்பியதாகத் தெரிவித்தது.
எனினும், இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், உரிய ஆவணங்கள் இல்லை என்பதாலும் கடைசி நேரத்தில் வழக்கு தொடுத்துள்ளதால் நீதிமன்றம் இதில் தலையிட இயலாது என்றும் கூறி பாபுவின் மனுவை தள்ளுபடி செய்தனர்.