நாகை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி இருப்பதை அடுத்து, மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலவுகிறது.
நேற்று முன்தினம் நாகை பகுதியில் இருந்து ஏராளமான மீனவர்கள் கடலுக்குச் சென்றிருந்தனர்.
ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த கடற்கொள்ளையர்கள் அரிவாள், ரப்பர் குழாய், கட்டைகளால் மீனவர்களைச் சரமாரியாகத் தாக்கினர். மேலும், மீனவர்களிடம் இருந்து கைபேசி, பிடித்து வைத்திருந்த மீன்கள், வழிகாட்டும் கருவி ஆகியவற்றை அவர்கள் பறித்துக்கொண்டனர்.
கடற்கொள்ளையர்களின் தாக்குதலில் நான்கு மீனவர்கள் படுகாயம் அடைந்தனர்.
சில தினங்களுக்கு முன்புதான் நாகை மாவட்டம் புஷ்பவனம் பகுதி மீனவர்களும் கடற்கொள்ளையர்களின் தாக்குதலுக்கு ஆளாகி இருந்தனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கிடையே, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 55 பேரை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, ஓரிரு தினங்களில் அவர்கள் அனைவரும் சொந்த ஊர் திரும்புவார்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதை இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள இந்திய தூதரகமும் உறுதி செய்துள்ளது.
இதற்கிடையே, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் இலங்கை அரசால் ஏலம் விடப்படுவதை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்திய-இலங்கை கூட்டு பணிக்குழுவானது மீன்பிடித்தல் தொடர்பான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கவிருக்கும் சூழ்நிலையில், இந்த ஏலம் விடுவதற்கான அறிவிப்பு வெளியாகி இருப்பது துரதிருஷ்டவசமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இப்பிரச்சினைக்கு சுமுகமானத் தீர்வு காண முன்வந்துள்ள தமிழக மீனவர்கள் மத்தியில் இலங்கை அரசின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"இலங்கை அரசு முறையாக கலந்தாலோசனை மேற்கொள்ளாமல் ஏலத்தை நடத்த அவசரம் காட்டுவது, வாழ்வாதாரத்தை இழந்த தமிழக ஏழை மீனவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் இந்திய தூதரகமும் தமிழக அரசும் மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பாதிக்கும். இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும்," என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.

