சரக்கு பெட்டகத்தில் மறைத்து வைத்து
கடத்தப்பட்ட 12 கிலோ தங்கம் பறிமுதல்
சென்னை: துபாயில் இருந்து சரக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் சென்னையில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கக்கடத்தல் தொடர்பாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், அதிகாரிகள் நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்தின் பன்னாட்டு சரக்குப் பிரிவில் அதிரடிச் சோதனை நடத்தினர். அப்போது வெளிநாடுகளில் இருந்து சரக்கு விமானம் மூலம் வந்த சரக்கு பெட்டகங்கள் சோதனையிடப்பட்டன. இதில், இயந்திர உதிரிப் பாகங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்த பெட்டகத்தை திறந்து பார்த்தபோது, 12 கிலோ தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
சிறுவன் உயிரிழப்பு: துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் மூடப்பட்டது
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் மூடப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 30ஆம் தேதி இம்மையத்தில் நடைபெற்ற பயிற்சியின்போது சுடப்பட்ட துப்பாக்கிக் குண்டு, அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 11 வயது சிறுவன் மீது தவறுதலாகப் பாய்ந்தது. இதில் காயமடைந்த சிறுவன், பின்னர் உயிரிழந்தான். இதையடுத்து, இப்பயிற்சி மையத்தை மூட உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றபோது, பயிற்சி மையம் மூடப்பட்டதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ராக்கெட் அறிவியல் பயிற்சிப் பட்டறை
சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ராக்கெட் அறிவியல் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதற்கான முயற்சி தொடங்கி உள்ளது. இது தொடர்பாக நேற்று நடைபெற்ற நிகழ்வில், விஞ்ஞானி ஏ.சிவதாணு பிள்ளை கலந்துகொண்டு உரையாற்றினார். இணையம் வழி மாணவர்களுக்கு நடைபெற உள்ள சிறப்பு பயிற்சிப் பட்டறையில் சிறந்த அறிவுத்திறனை வெளிப்படுத்தும் மாணவர்கள் ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
இணைய சூதாட்டத்தால் கடன்: சங்கிலி பறித்த ஆட்டோ ஓட்டுநர் கைது
சென்னை: இணைய சூதாட்டத்தில் பங்கேற்று பெரும் தொகையை இழந்த ஆட்டோ ஓட்டுநர் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டு கைதானார். திருவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. 35 வயதான அவர், இணையம் வழி நடைபெறும் சூதாட்டத்தில் தொடர்ந்து பங்கேற்று வந்துள்ளார். இதில், அவருக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக பெற்ற கடன்களைத் தீர்க்க வழி தெரியாத நிலையில், இரண்டு குழந்தைகளின் தந்தையான ஏழுமலை, சங்கிலிப் பறிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளார். கடந்த டிசம்பர் 18ஆம் தேதி, திருவேற்காட்டில் உள்ள கடைக்கு வெளியே நின்றிருந்த ஒரு பெண்ணின் 15 பவுன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு ஓட்டம்பிடித்தார் ஏழுமலை. இதையடுத்து, காவல்துறையினர் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தபோது ஏழுமலை ஆட்டோவில் ஏறிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து, விசாரணைக்குப் பின்னர் அவர் கைதானார்.

