649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் 12,838 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்
சென்னை: தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் நேற்று முன்தினம் மாலை வெளியிட்டார்.
சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 பதவி இடங்களுக்குத் தேர்தல் நடைபெறும்.
இத்தேர்தலுக்குத் தடைவிதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் அண்மையில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த நீதிமன்றம், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாகக் கடைப்பிடித்து தேர்தலை நடத்தலாம் எனத் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், தேர்தல் அறிவிப்பை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத் தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார், ஜனவரி 28 (இன்று) முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் என்றும் அனைத்து பதவி இடங்களுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
தேர்தல் நடைபெற உள்ள மாநகராட்சிகளில் 15,158 வாக்குச்சாவடிகளும் நகராட்சிகளில் 7,417, பேரூராட்சிகளில் 8,454 என மொத்தம் 31,029 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட உள்ளன. சென்னை மாநகராட்சியில் மட்டும் 5,794 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுவதாக வெ.பழனிகுமார் கூறினார்.
"இந்தத் தேர்தலில் சுமார் 13.7 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் சுமார் 80,000 காவலர்கள் ஈடுபடுத்தப்படுவர்.
"649 தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் 1,644 உதவி தேர்தல் அதிகாரிகளும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒரு வாக்குச்சாவடிக்கு நான்கு வாக்குப்பதிவு அதிகாரிகள் வீதம் சுமார் 133,000 அதிகாரிகள் வாக்குப்பதிவுப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்," என்று மாநிலத் தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பணப்பட்டுவாடாவை கண்காணிக்க சென்னையில் 45 பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களில் கொண்டு செல்லப்படும் ரொக்கப் பணம், நகைகள் உள்ளிட்ட பொருள்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அரசியல் கட்சித் தொண்டர்கள் பிரசாரப் பணிகளைத் தொடங்கி உள்ளனர்.

