சென்னை: தமிழக மாணவர்கள் இன்னொரு மொழியைக் கற்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் இந்தி மொழிக்கு மறைமுகமாக வக்காலத்து வாங்குவதையும் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான அறிவுறுத்தலை வழங்கி இருப்பதையும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
காலஞ்சென்ற முதல்வர் அண்ணா சட்டப்பேரவையில் நிறைவேற்றிய இருமொழிக் கொள்கை தீர்மானத்தை அரை நூற்றாண்டு காலமாக தமிழகம் கடைப்பிடித்து வருவதாக அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குடியரசு தினத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விடுத்திருந்த வாழ்த்துச் செய்தியில் 'நீட்' தேர்வு அவசியம் என்று பொருள்படும்படி மேலோட்டமாக சுட்டிக்காட்டி இருப்பதை ஏற்க இயலாது என்றும் வைகோ கூறியுள்ளார்.
"தமிழக முதல்வர் நேரில் சென்று வலியுறுத்தியும்கூட 'நீட்' தேர்வு விலக்கு சட்ட முன்வரைவுக்கு ஆளுநர் இசைவு அளித்து மத்திய அரசின் பரிந்துரைக்கு அதை அனுப்பவில்லை.
"அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் இயங்கும் ஆளுநர், மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட மாநில அரசின் உரிமைகள், கடமைகளுக்கு உரிய மதிப்பை அளித்து எல்லை மீறாமல் தமது பணிகளை நிறைவேற்ற வேண்டும்.
"ஆனால், ஆளுநரின் அறிக்கையை முழுமையாக, ஆழமாக உள்வாங்கினால்தான் மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளையும் அதற்குப் பின்னணியில் இருந்து இயக்கி வரும் கோட்பாடுகளையும் உயர்த்திப் பிடிக்கும் வகையில் அவர் கருத்துகள் இருப்பது தெரியவருகிறது," என்று வைகோ தெரிவித்துள்ளார்.
உலகப் பொதுமறை 'திருக்குறளை' வேத சட்டகத்தினுள் அடைக்க முயற்சி செய்வதையும் தமிழர்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ள அவர், ஆளுநர் என்பவர் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர் என்றும் எந்த தத்துவத்தின் சாயலும் ஆளுநர் மீது படர்ந்து விடலாகாது என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநரின் வாழ்த்துச் செய்தி அந்த எல்லைகளை கட்டறுத்து தாண்டி இருப்பதாகவும் வைகோ சுட்டிக்காட்டி உள்ளார்.

