செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
9ae56262-c490-4d1a-81e3-1befa6fbd46c
-

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு அனைத்துலக விருது

ஈரோடு: கடந்த பத்து ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதை அடுத்து, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு 'டிஎக்ஸ்2' (TX2) என்ற அனைத்துலக விருது கிடைத்துள்ளது. 'டபுள்யு டபுள்யு எஃப் இந்தியா' என்ற நிறுவனம் மேலும் பல அமைப்புகளுடன் இணைந்து இந்த விருதை வழங்குகிறது. புலிகளின் நலனைக் காத்து, அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும் அமைப்புக்கு இந்த விருது வழங்கப்படும். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு 40ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை இப்போது 80ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் அதிக எண்ணிக்கையிலான புலிகள் வாழும் காப்பகம் இதுதான்.

மீன்கூடையுடன் வந்த பெண்மணிக்கு பேருந்தில் ஏற அனுமதி மறுப்பு

செங்கல்பட்டு: மீன் கூடையுடன் வந்த பெண்மணியை பேருந்துக்குள் அனுமதிக்க மறுத்த நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர். நேற்று முன்தினம் செங்கல்பட்டைச் சேர்ந்த 52 வயதான செல்லம்மாள், வியாபாரத்தின் பொருட்டு மாமல்லபுரம் செல்ல அரசுப் பேருந்தில் ஏற முற்பட்டபோது, நடத்துநரால் தடுக்கப்பட்டார். இதை எதிர்த்து செல்லம்மாள் கேள்வி எழுப்பியபோது, 'யாரிடம் வேண்டுமானாலும் புகார் தெரிவியுங்கள்' என அந்த நடத்துநர் கூறுவது காணொளி யாகப் பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

நீர்நிலை நிலங்களை பதிவு செய்யாதீர்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: ஆக்கிரமிப்புகளைத் தவிர்க்க வேண்டுமெனில் நீர்நிலைகளுடன் தொடர்புடைய நிலங்களை பதிவுத்துறையினர் பதிவு செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆக்கிரமிப்பு ஏதும் இல்லை என்பதற்கான ஒப்புதல் அறிவிப்பை பெறவில்லை எனில், சொத்துவரி, மின், குடிநீர் இணைப்பு வழங்கக்கூடாது எனவும் வழக்கு ஒன்றின் விசாரணையின்போது உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. மேலும், நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு நிலத்துக்கு ஒப்புதல், அனுமதி தந்த அதிகாரிகள் மீது ஒழுங்கு, குற்ற நடவடிக்கை தேவை எனவும் பதிவுத்துறைக்கு நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

பாமக: 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம்

சென்னை: தமிழகத்தில் 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டத்தை உருவாக்கவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். ஆந்திர மாநிலத்தில் மொத்தமுள்ள 13 மாவட்டங்களும் பிரிக்கப்பட்டு, புதிதாக மேலும் 13 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய நடவடிக்கை மாநில வளர்ச்சிக்கும் நிர்வாகம் மேம்படவும் உதவும் என ராமதாஸ் கூறியுள்ளார்.