சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கும்போது எழுந்து நிற்பது சட்டமல்ல என்றும் அது அறம் என்றும் கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்காததற்கு அவர் டுவிட்டர் பதிவின் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக் கிளையில் நேற்று முன்தினம் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியின் முடிவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இசைக்கப்பட்டபோது, அதிகாரிகள் சிலர் எழுந்து நிற்கவில்லை.
அவர்கள் இருக்கையில் அமர்ந்திருப்பதைக் கண்ட செய்தியாளர் ஒருவர், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ஒலிக்கும்போது எழுந்து நின்று மரியாதை செலுத்தவேண்டும் என்றார்.
அதற்கு அதிகாரிகள் தரப்பில், அவ்வாறு எழுந்து நிற்கவேண்டிய அவசியம் இல்லை என்றும் இதுதொடர்பாக நீதிமன்றமே உத்தரவு பிறப்பித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இசைக்கப்படும்போது அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து விளக்கப்பட்டதும், இனி ஆணை பின்பற்றப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் அதிகாரிகளின் செயலுக்காக ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சாமி வருத்தம் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகளின் இந்தச் செயல்பாட்டுக்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட கவிஞர் வைரமுத்து, அதிகாரிகளின் இத்தகைய போக்கை 'தமிழ்த்தாய் மன்னிப்பாள்; சட்டம்...?' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், அதிகாரிகளின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்து சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக் கிளையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி அறிவித்தது. ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திட்டமிட்டே தமிழ்த்தாயை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் சாடியுள்ளார்.
"மத்திய அரசு அதிகாரிகளாக இருந்தாலும் தமிழகத்தில் மாநில விதிகளை மதிக்கவேண்டும். தமிழ்த்தாயை அவமதித்தவர்களை மன்னிக்கக்கூடாது. இதுகுறித்து புகார் வந்தால்தான் நடவடிக்கை எடுப்போம் என அரசும் காவல்துறையும் காத்திருக்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்," என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் தினகரன், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது எழுந்து நிற்காததோடு, அதனை நியாயப்படுத்தியும் பேசியுள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் செயலை வன்மையாகக் கண்டிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

