செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
3c517853-4a79-4d68-a8ed-e4d3946cd9d8
-

நியாயவிலைக் கடைகளில் சிறுதானியம்

சென்னை: தமிழகத்தில் நியாய விலைக்கடைகளில் ராகி, கம்பு, தினை, குதிரைவாலி, சாமை, வரகு உள்ளிட்ட சிறுதானியங்களை விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டு ஆணை பிறப்பித்துள்ளது. முதற்கட்டமாக சென்னை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளில் இந்த சிறுதானியங்கள் கிடைக்கும் என்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக சிறுதானியங்கள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து நியாயவிலை கடைகளில் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

43 சவரன் தங்க நகைகள் கொள்ளை

சென்னை: சென்னை கொரட்டூரில் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்துவந்த சந்திரசேகர் என்பவரின் வீட்டில், திருவண்ணாமலையைச் சேர்ந்த சகோதரிகளும் அவர்களது கணவர்களும் தங்கி வேலை பார்த்து வந்தனர்.

இந்நிலையில், வீட்டில் இருந்த பாதுகாப்பு பெட்டகம் உடைக்கப்பட்டு, 43 சவரன் தங்க நகைகள் களவு போயின. காவல்துறை அதிகாரிகளின் விசாரணையில், வேலைக்காரப் பெண்களும் அவர்களது கணவர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 27 சவரன் நகைகளும் ரூ.180,000 ரொக்கப் பணமும் மீட்கப்பட்டன. படம்: ஊடகம்

அண்ணாமலை, குஷ்பு மீது புகார்

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, நிர்வாகிகள் குஷ்பூ, எச்.ராஜா மீது காங்கிரஸ் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாணவி தனது உயிரை மாய்த்துக்கொண்டது தொடர்பாக விசாரணை நடக்கும் நிலையில், இந்தப் புகாரை காங்கிரஸ் அளித்துள்ளது. மதக்கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படும் பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

244 ஆமை முட்டைகள் சேகரிப்பு

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே உள்ள புதுரோடு முதல் அரிச்சல்முனை வரை கடல் ஆமைகள் முட்டை இடும் காலம் தற்போது தொடங்கி உள்ளது. ராமேசுவரம், தனுஷ்கோடி கடலோரப் பகுதியில் இரு குழிகளில் சுமார் 244 ஆமை முட்டைகளை வனத்துறை அதிகாரிகள் சேகரித்துள்ளனர். அவை ராமேசுவரம் ஆமை முட்டை பொரிப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இம்முட்டைகள் பொரிக்கப்பட்டு, ஆமைகள் கடலில் விடப்படும் என அதிகாரிகள் கூறினர்.