கோவை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், இத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று தொடங்கியது.
இம்முறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஏழு முனைப் போட்டி நிலவுகிறது.
திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக ஆகிய கட்சிகள் தேர்தல் களத்தில் சுறுசுறுப்புடன் காணப்படுகின்றன.
இந்நிலையில், வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியை அனைத்துக் கட்சிகளும் தீவிரப்படுத்தியுள்ளன.
முதல்வர் ஸ்டாலின் தலைமை யில் திமுக ஆலோசனைக் கூட்டம் நேற்று காலையிலேயே தொடங்கிவிட்டது.
காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியன திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசித்து வருகின்றன.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அைனத்து இடங்களிலும் வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
அேதபோல், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம், தேர்தல் வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக மாவட்டத் தலைவர்கள் கூட்டம் தொடங்கியது.
மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் அதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு, வெற்றி வாய்ப்புள்ள இடங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, சென்னையில் 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதை தடுக்க இந்த நடிவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தேமுதிக கண்டனம்:
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை 26ஆம் தேதி வெளியிட்டுவிட்டு வெறும் ஒருநாள் இடைவெளியில் வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என அறிவித்துள்ளது நியாயமற்றது என தேமுதிக கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எவ்வித காலஅவகாசமும் வழங்காமல் உடனடியாக வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான தேதி அறிவிக்கப்பட்டது ஏன்? தேர்தல் தேதி அறிவிப்பிலேயே தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் சமவாய்ப்பு வழங்கவேண்டும்," என்று தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

