வைகோ, சங்கர் ஜிவாலுக்கு தொற்று
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், வீட்டிலேயே அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அதேபோல், சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலும் குறைந்த அளவிலான தொற்று பாதிப்பு காரணமாக வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
'தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை'
சென்னை: வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் சென்னை புறநகர் ரயில்களில் பயணம் செய்வதற்கு இனி இரண்டு தவணை தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் தேவையில்லை என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவு குறைந்து வருவதால், டிக்கெட் வாங்கும்போது தடுப்பூசி சான்றிதழைக் காட்டவேண்டாம் என்று அறிவித்துள்ளது ரயில்வே நிர்வாகம். ஆனால், முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது முக்கியம் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
தமிழ் பல்கலைக்கழகத்தில் ஒலிக்கும் திறக்குறள்
தஞ்சாவூர்: தஞ்சையில் உலகப் புகழ்பெற்ற தமிழ்ப் பல்கலைக்கழகம் 1981ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது தமிழ் மொழிக்கென்று அமைக்கப்பட்ட ஒரே பல்கலைக்கழகமாகும். இங்கு கலை, மொழி, அறிவியல், கல்வெட்டியல், ஓலைச்சுவடி என பல்வேறு துறைகளில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 26ஆம் தேதி கொண்டாடப்பட்ட குடியரசு தினத்தில் இருந்து தினமும் திருக்குறள் ஒலிக்கிறது. தினமும் காலை, மாலை இருவேளையும் 6 மணி முதல் 7 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு 10 திருக்குறளும் அதன் பொருளும் இசையுடன் ஒலித்து வருகிறது.
கொரோனா சிகிச்சை பெற்று வந்த சிறைக் கைதி தப்பியோட்டம்
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிறைக்கைதி தப்பி ஓடியதை அடுத்து, அவரை இரண்டு நாள்களாக நகரின் பல்வேறு பகுதிகளிலும் காவல்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். அடுத்தடுத்து நான்கு சிறிய கோயில்களை சேதப்படுத்தியது தொடர்பாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கோவை மத்திய சிறையில் கஜேந்திரன் அடைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 27ஆம் தேதி கொரோனா சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டவர், தப்பி ஓடிவிட்டார்.
மகன்கள் மீது நடவடிக்கை
மதுரை: பெற்ற தாயை வீட்டை விட்டுத் துரத்திய மகன்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். கணவரை இழந்த 75 வயதான மூதாட்டி, தனது வீட்டை விற்று இரு மகன்களுக்கும் பணத்தைப் பிரித்துக் கொடுத்துள்ளார். ஆனால், வயது மூப்பால் வீட்டிலிருந்து அவரை அவரது மகன்கள் விரட்டி அடித்துள்ளனர்.

