சேலம்: 'தேர்தல் மன்னன்' என்று அழைக்கப்படும் சேலத்தைச் சேர்ந்த கே.பத்மராஜன் என்பவர், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது ேவட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி இத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனர்.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி சனிக்கிழமையான நேற்றும் பலரும் வேட்பு மனுக் களைத் தாக்கல் செய்தனர். வரும் திங்கள் முதல் இப்பணி மேலும் தீவிரமடையும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த ஓமியோபதி மருத்துவர் பத்மராஜன் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என எந்த ஒரு தேர்தலாக இருந்தாலும் தயங்காமல் இவரும் போட்டியிடுவார்.
தமிழகத்தில் மட்டுமின்றி வடமாநிலங்களிலும் பல தேர்தல் களங்களைக் கண்டவர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, எம்ஜிஆர், கருணாநிதி உள்ளிட்டவர்களையும் எதிர்த்து அவர்களது தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். இப்படி, அவர் இதுவரை தாக்கல் செய்த வேட்புமனுக்களின் எண்ணிக்கை 227 ஆகும்.
இதற்கிடையே, இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் கட்டாயம் இரு தவணை கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை வேட்பு மனுவுடன் இணைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

