சென்னை: தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் முத்தமிழ்செல்வி என்ற பெண், வீர மங்கை வேலு நாச்சியார் போல் உடையணிந்து குதிரை மீது அமர்ந்து தொடர்ச்சி யாக 1,389 அம்புகளை எய்து யுனிக்கோ (Unico) உலக சாதனையைப் படைத்துள்ளார்.
இரண்டு பிள்ளைகளுக்குத் தாயான முத்தமிழ்செல்வி ஏறக்குறைய 8 மீட்டர் தொலைவில் இருந்து மூன்று மணி நேரம் முடியும் தறுவாயில் 1,389 அம்புகளை எய்தி இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.
இந்த அம்பு எய்தல் நிகழ்வின் போது, அப்பகுதி மக்களும் இளையர்களும் ஆரவாரத்துடன் முத்தமிழ்செல்வியை உற்சாகப்படுத்தினர்.
போட்டியில் வெற்றி பெற்றதற் கான சான்றிதழையும் விருதுகளையும் யுனிக்கோ நிறுவனத்தினர் வழங்கி, வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முத்தமிழ்செல்வி, நான் புரிந்த இந்தச் சாதனையை தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரமங்கை வேலு நாச்சியாருக்குச் சமர்ப்பிக்கிறேன். இதுபோன்ற வீரப்பெண்மணிகள் தமிழகத்தில் இன்னும் உள்ளனர். பெண்கள் சாதனை புரிய முன்வரவேண்டும் என்பதற் காகவே இந்த உலக சாதனையைப் படைத்துள்ளேன்," என்றார்.

