மதுரை: தினந்தோறும் மது அருந்திவிட்டு, வீட்டில் உள்ள பெற்றோருக்குப் பெரும் தொல்லை கொடுத்து வந்த மகனை பெற்றோரே கட்டையால் அடித்துக் கொலை செய்து, சாக்குமூட்டையில் கட்டி தீவைத்து எரித்துள்ளனர்.
இந்தக் குற்றத்தை கண்காணிப்பு கேமரா காட்டிக் கொடுத்ததை அடுத்து பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.
நேற்று முன்தினம் காலையில் மதுரை ஆரப்பாளையம் வைகை ஆற்றின் கரையோரம் பாதி எரிந்த நிலையில் ஆணின் சடலம் கிடப்பதாக காவல்நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கரிமேடு காவல்நிலையக் காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய பிறகு, விசாரணையைத் தொடங்கினர்.
சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், நள்ளிரவில் ஒரு முதியவரும் மூதாட்டியும் சைக்கிளின் பின்னால் ஒரு மூட்டையைக் கட்டி, அதனை தள்ளிக்கொண்டு வைகை ஆற்றுப் பக்கம் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழ வியாபாரி முருகேசன், 72, அவரது மனைவி கிருஷ்ணவேணி, 65, ஆகியோரிடம் விசாரித்தனர்.
தங்களது ஒரே மகன் மணி மாறனைக் கொன்றதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். திருமணமாகி மூன்று பிள்ளைகள், மனைவியைப் பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்த மணிமாறன், தினமும் மது அருந்திவிட்டு குடும்பத்தில் ரகளை செய்துவந்தது தெரியவந்தது.

