சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இடப்பங்கீடு தொடர்பில், திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் காங்கிரஸ் அதிக எண்ணிக்கையிலான வார்டுகளைக் கேட்பதாகவும் அம்மாவட்டங்களைச் சேர்ந்த திமுக தலைவர்கள் இக்கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டதாகவும் ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
இம்முறை காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தைக் குழுக்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள திமுக மாவட்டச் செயலாளரிடம் பேசி காங்கிரசுக்கான வார்டுகளை முடிவு செய்ய உள்ளன. அந்த வகையில், திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் காங்கிரஸ் 12 இடங்களைக் கேட்பதாகவும் திமுக தரப்பில் நான்கு வார்டுகள் மட்டுமே ஒதுக்க இயலும் எனக் கூறப்பட்டதாகவும் தெரிகிறது.
திருச்சியில் 15 வார்டுகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய பின்னர், மீதமுள்ள 50 வார்டுகளிலும் களமிறங்க வேண்டும் என்பதே திமுகவின் திட்டமாக உள்ளது.
எனவே, காங்கிரஸ் கேட்கும் வார்டுகளை ஒதுக்க இயலாது என்று திமுக முதன்மைச் செயலரும் அமைச்சருமான கே.என்.நேரு திட்டவட்டமாக கூறிவிட்டதாக அந்த ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே நிலைமைதான் மற்ற மாவட்டங்களிலும் நிலவுவதாகத் தெரிகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலிலும் எதிர்பார்த்ததைவிட திமுகவுக்கு பெரிய வெற்றி கிடைத்தது.
அந்த வெற்றிநடை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் நீடிக்கும் என திமுக தலைமை நம்புகிறது.
எனினும், இம்முறை கூட்டணிக் கட்சிகளைக் கழற்றிவிடாமல், அதே சமயம் அதிக எண்ணிக்கையிலான வார்டுகளை விட்டுக்கொடுக்காமல் தேர்தலில் களமிறங்க வேண்டும் என்பதே திமுக தலைமையின் திட்டம் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இதுவரை எந்த கட்சியினரும் அதிக அளவில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யவில்லை.
இந்நிலையில், இன்று அமாவாசை தினம் என்பதால் பெரும்பாலானோர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை என்ற போதிலும், திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் வேட்பாளர்கள் கடந்த முறை வெற்றி பெற்ற இடங்களில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

