சென்னை: இடப்பங்கீடு தொடர்பாக பாஜக, அதிமுக இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏதும் எழவில்லை என்றும் இந்தப் பேச்சுவார்த்தை நீடிக்கும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
வேட்புமனுத் தாக்கல் செய்ய பிப்ரவரி 4ஆம் தேதி வரை அவகாசம் உள்ளதால், இடப்பங்கீடு தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடக்கும் என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இடப்பங்கீடு தொடர்பாக கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளுமே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் நேற்று முன்தினம் அதிமுக, பாஜக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
சுமார் மூன்று மணி நேரம் இருதரப்பும் பேசியதாகவும் அப்போது பாஜக அதிகமான வார்டுகளை ஒதுக்கக் கோரியதால் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்றும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் இடப்பங்கீடு செய்து கொள்வதும் போட்டியிடுவதும் சிக்கலான வேலை என்று அண்ணாமலை கூறினார்.
"கிட்டத்தட்ட 12,838 வார்டுகளில் உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது. எனவே விரிவாக ஆலோசனை நடத்தித்தான் இடங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதிமுக தலைமையிலான கூட்டணி என்பது முக்கியமான எதிர்க்கட்சி அணி. தேர்தல் களத்தில் பலமான கூட்டணியாக நின்று ஆளும் திமுக மீதான புகார்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்," என்றார் அண்ணாமலை.
இந்நிலையில் அதிமுகவுடனான பேச்சுவார்த்தை நல்லபடியாக நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், அனைத்தும் சுமுகமாக பேசி முடிக்கப்பட்ட பின்னர் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றார்.
பாஜக அதிகமான வார்டுகளை ஒதுக்கக் கோரியதை ஒப்புக்கொண்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக நலன் பாதிக்கப்படாத வகையில் இடப்பங்கீடு தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இரு கட்சிகளுக்கும் இடையே சுமுக உடன்பாடு ஏற்படாவிட்டால் பாஜக தனித்துக் களம் காண வாய்ப்புள்ளது என்றும் உடனடியாக வேட்பாளர் பட்டியலை வெளியிட அக்கட்சி தயார் நிலையில் உள்ளது என்றும் தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

