மா.சுப்பிரமணியன்: புதிய கொரோனா பாதிப்பு குறித்து அச்சம் வேண்டாம்
சென்னை: முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கொரோனாவின் புதிய வகையான 'நியூகோவ்' குறித்து அச்சமடையத் தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 9.7 மில்லியன் பேர் இன்னும் இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றும் அவர்களை இலக்கு வைத்துத்தான் மெகா தடுப்பூசி முகாம்கள் நடை பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்று பாதிப்பு குறித்து உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தாத எந்தத் தகவலையும் பொதுமக்கள் நம்பக்கூடாது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
ஆளுநரை விமர்சித்த 'முரசொலி' கட்டுரை: தமிழக பாஜக கண்டனம்
சென்னை: தமிழக ஆளுநருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் கட்டுரை வெளியாகி இருப்பதற்கு தமிழக பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நேற்று முரசொலி நாளேட்டின் கடைசிப்பக்கத்தில் 'கொக்கென்று நினைத்தாரோ தமிழக ஆளுநர் ரவி' என்ற தலைப்பில், அவரது குடியரசு தின வாழ்த்துச் செய்தியைக் கடுமையாக விமர்சித்து கட்டுரை ஒன்று இடம்பெற்று இருந்தது. இந்நிலையில், இந்தக் கட்டுரை அவதூறானது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். நடுநிலையாக இருக்கக்கூடிய சாமானியர்கள் இச்செயலைக் கண்டிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆதிச்சநல்லூர்: சுண்ணாம்புத் தளம், முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு
திருச்சி: ஆதிச்சநல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியில் மீண்டும் முதுமக்கள் பயன்படுத்திய தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு மத்திய தொல்லியல் துறை சார்பில் கடந்த அக்டோபர் மாதம் முதல் அகழாய்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்கு 45 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவை சங்க காலத்தில் மக்கள் இங்கு வாழ்ந்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்துவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். மேலும், 3,500 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாக, சுண்ணாம்பு தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
13 கடலோர மாவட்டங்களில்
ஒரு மில்லியன் பறவைகள்
சென்னை: தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்களில் 80 வகைகளைச் சேர்ந்த, ஒரு மில்லியன் பறவைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தமிழக வனத்துறை அண்மையில் கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொண்டது. இரு தினங்கள் நடந்த இந்த கணக்கெடுப்பில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக வனத்துறை தெரிவித்தது.
முல்லைப் பெரியாறு அணை: பாதுகாப்பு ஆய்வுக்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு
சென்னை: முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக மறு ஆய்வு மேற்கொள்ளப்படுவதை அனுமதிக்கக் கூடாது என தமிழக விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அண்மையில் இத்தகைய ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என மத்திய நீர் வள கண்காணிப்புக் குழு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளது. அதில், அணையின் கட்டுமானம், பலம், தரம் ஆகியவை நன்றாக உள்ள போதிலும், அணையின் பாதுகாப்பு குறித்து மறு ஆய்வு செய்வது அவசியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை நீர் தேக்கி வைக்கப்பட்டால் அணையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என்று கேரள அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதை தமிழக அரசு ஏற்க மறுப்பதால் இருதரப்புக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.

