சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்குப் புறப்படும் பயணிகள், பயணப் பெட்டிகளைப் பதிவுசெய்யும் நடைமுறை இன்னும் ஒருசில மாதங்களில் எளிதாகவிருக்கிறது.
அங்கு கட்டப்பட்டுவரும் புதிய ஒருங்கிணைந்த முனையம், இவ்வாண்டு நடுப்பகுதியில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணப் பெட்டிகளை சுயமாக பதிவுசெய்யும் கூடங்களும் பயணத்தைச் சொந்தமாக பதிவுசெய்யும் (check-in) முகப்புகளும் அந்த முனையத்தில் அமைக்கப்படும்.
ஏற்கெனவே விமான நிலைய முனையங்களில் சுய பயணப் பதிவு முகப்புகள் பயன்பாட்டில் உள்ளன. அப்படி இருந்தும், புதிய முனையத்தில் பயணப் பெட்டிகளைச் சொந்தமாக பதிவுசெய்யும் வசதி பயணிகளிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, பயணத்திற்கான வருகையையும் பயணப் பெட்டிகளையும் பதிவுசெய்ய பயணிகள் நீண்டநேரம் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது.
பயணப் பெட்டிகளைச் சொந்தமாக பதிவுசெய்யும் வசதி அறிமுகம் கண்டவுடன், இந்த நடைமுறையை விரைவில் முடித்துவிட்டு குடிநுழைவு, பாதுகாப்பு நடைமுறைகளைப் பயணிகள் நிறைவேற்ற முடியும். இதனால், விமான நிலையத்தில் நெரிசல் குறையும் என சென்னை விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறினார்.
பயணிகளுக்கு உதவ, முகப்புகளில் ஊழியர்கள் பணியமர்த்தப்படுவர்.
ரூ.2,000 கோடி செலவில் கட்டுப்பட்டுவரும் இந்த முனையத்துக்கான கட்டுமானப் பணிகள் ஒருசில ஆண்டுகளுக்கு முன்னதாக தொடங்கிவிட்டன.
பயணிகளுக்குக் கூடுதல் வசதியை ஏற்படுத்தித் தருவதுடன், புதிய முனையத்தின் வடிவமைப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் கலை, கலாசாரத்தை அது பறைசாற்றும் எனக் கூறப்படுகிறது.


