கடலில் குளித்த 2 சிறுவர்கள் பலி
சென்னை: எண்ணூர் கடல் பகுதியில் குளித்த சிறுவர்கள் இருவர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர். நேற்று முன்தினம் அப்பகுதியைச் சேர்ந்த 50 வயதான டேவிட் என்பவர் தனது இரண்டு குழந்தைகள் உட்பட ஏழு சிறுவர்களுடன் கடலில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது வழக்கத்தைவிட அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில், சிறுவர்கள் ஏழு பேரும் கடல் அலையில் சிக்கித் தத்தளித்தனர். இதையடுத்து டேவிட் உடனடியாக கடலில் குதித்து நான்கு சிறுவர்களை அடுத்தடுத்து கரை சேர்த்தார். மற்ற மூவரும் கடலில் மூழ்கினர். இந்நிலையில், டேவிட்டின் 12 வயது மகன் உட்பட இரண்டு சிறுவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டனர். மற்றொரு சிறுவனை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.
ஒரு கோடி ரூபாய் வரி செலுத்திய சரவணா செல்வரத்தினம் நிறுவனம்
சென்னை: ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு தொடர்பாக அண்மையில் சென்னை, தியாகராய நகரில் உள்ள சரவணா செல்வரத்தினம் நிறுவனத்துக்குச் சொந்தமான கடைகளில் ஜிஎஸ்டி பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது வரி ஏய்ப்பு தொடர்பான முக்கிய ஆவணங்கள், கணக்கு விவரங்களை அவர்கள் கைப்பற்றியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ஆவணங்களை ஆய்வு செய்தபோது பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரியவந்துள்ளதாகவும் இதையடுத்து முதற்கட்டமாக அந்நிறுவனம் ஒரு கோடி ரூபாய் வரி செலுத்தி உள்ளதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லாரியின் பின்புறம் மோதிய இரு சக்கர வாகனம்: மூவர் பலி
செங்கல்பட்டு: சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரியின் பின்புறத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இரு குழந்தைகள் உட்பட மூன்று பேர் பலியாகினர். இச்சம்பவம் நேற்று முன்தினம் செங்கல்பட்டு மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. குரோம்பேட்டையைச் சேர்ந்த 37 வயதான கோபிநாத் தனது ஒன்பது வயது மகன், ஏழு வயது மகளுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மண்ணிவாக்கம் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியை கோபிநாத் கவனிக்கவில்லை. இதனால் அவர் சென்ற இருசக்கர வாகனம் லாரியின் பின்புறத்தில் மோதியது. இதில் அவரும் இரு குழந்தைகளும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். போதிய வெளிச்சம் இல்லாத பகுதியில் லாரியை நிறுத்திய ஓட்டுநர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.
வாக்காளர்களைக் கவர்ந்துள்ள அமமுக வேட்பாளரின் சுவரொட்டி
மதுரை: அமமுக சார்பில் மதுரை மாநகராட்சியின் 61வது வார்டில், குக்கர் சின்னத்தில் போட்டியிடு கிறார் பாத்திமா பீவி. இந்நிலையில், தனது வார்டில் அவர் ஒட்டியுள்ள சுவரொட்டி (படம்) வாக்காளர்களை மிகவும் கவர்ந்துள்ளது. "மனைவியை வெகுவாக நேசிப்பவர்கள் குக்கரை வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். எனவே குக்கர் சின்னத்துக்கு வாக்களியுங்கள்," என்று அச்சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று முதல் பள்ளிகள் திறப்பு
சென்னை: கொரோனா தொற்றுப் பரவல் குறைந்து வருவதை அடுத்து தமிழகத்தில் உள்ள பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. அனைத்து பள்ளிகளும் முதலாம் வகுப்பு தொடங்கி 12ஆம் வகுப்பு வரை நூறு விழுக்காடு மாணவர்களுடன் இயங்கலாம் என அரசு அறிவித்துள்ளது.ஆசிரியர்களும் மாணவ-மாணவியரும் வழக்கம்போல் குறித்த நேரத்துக்குள் பள்ளிக்கு வர வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து நீண்ட நாள்களுக்குப் பிறகு தமிழகத்தில் பள்ளிகள் முழுமையாக செயல்பட உள்ளன. இதற்கு முன்பு சுழற்சி முறையிலேயே பள்ளிகளில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இப்போது 100 விழுக்காடு மாணவர்களுடன் பள்ளிகள் செயல்பட உள்ளன.

