யார் காரணம் என்பதில் இரு கட்சிகளும் காரசார வாக்குவாதம்
சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் வேளையில், அந்த மாநிலத்தின் அரசியல் கட்சிகள் நீட் பிரச்சினையைப் பெரிய அளவில் கையில் எடுக்கின்றன.
இந்தியாவில் மருத்துவம் படிக்க நீட் தேர்வு அவசியம் என்று மத்திய அரசாங்கம் 2014ல் அறிவித்தது. அந்தத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மாநில கட்சிகள் போராடி வருகின்றன.
இந்த நிலையில், இப்போதைய மாநில அரசாங்கம் நிறைவேற்றிய நீட் தேர்வுக்கு எதிரான ஒரு தீர்மானத்தை மாநில ஆளுநர் ரவி, தமிழக சட்டமன்ற நாயகருக்கே திருப்பி அனுப்பிவிட்டார்.
அதையடுத்து, இன்று தமிழக சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் நடக்கிறது. அதில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் மீண்டும் உறுதியாக நிறைவேற்றப்பட்டு அதிபரின் அங்கீகாரம் பெறுவதற்காக மறுபடியும் அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.
இச்சூழலில், உள்ளாட்சித் தேர்தல் நெருங்குவதால் இந்தப் பிரச்சினையை அரசியல் கட்சிகள் கையில் எடுக்கின்றன.
நீட் தேர்வை 2014ல் பாஜக அரசாங்கம் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தியது என்றும் ஆனால் அப்போதைய அதிமுக முதல்வர் ஜெயலலிதா அதை எதிர்த்ததாகவும் அதையடுத்து 2016ல் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கப்பட்டதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இருந்தாலும் ஜெயலலிதாவுக்குப் பிறகு பொறுப்புக்கு வந்த அதிமுக தலைவர்கள் பாஜகவுக்கு அடிமைகளாக மாறி, நீட் தேர்வை எதிர்க்க தவறிவிட்டதாகவும் அதன் காரணமாக மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் மெய்நிகர் ரீதியில் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் ஸ்டாலின் பகிரங்கமாக குற்றம் சுமத்தினார்.
இன்று கூடும் சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் முன்பைவிட வலுவாக, உறுதியாக நிறைவேற்றப்பட்டு அது மறுபடியும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், தமிழ்நாட்டில் நீட் நடப்புக்கு வந்ததற்குத் திமுகதான் காரணம் என்று அறிக்கை ஒன்றில் குறைகூறினார்.
திமுக பதவியில் இருந்தபோது தமிழ்நாட்டுக்கு நீட் வரவில்லை என்று அந்தக் கட்சி கூறுவதை பன்னீர்செல்வம் மறுத்தார்.
நீட் பற்றிய அறிவிப்பு 2010 டிசம்பரில் அரசிதழில் வெளியிடப்பட்டது. அப்போது மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தது.
மத்தியில் சுகாதார துணை அமைச்சராக இருந்தவர் திமுகவின் காந்தி செல்வன். நீட் தேர்வை அவர் ஆதரித்தார். 2011ல் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை இழந்தது. மத்திய அரசாங்கம் 2012ல் நீட் தேர்வை நடைமுறைப்படுத்த முயற்சிகளை எடுத்தது.
ஆனால் பல மாநிலங்களும் அதை எதிர்த்தன. அப்போது தமிழக முதல்வராக இருந்த அதிமுக தலைவி ஜெயலலிதாவும் அதை எதிர்த்தார். அதனால் மத்திய அரசு நீட் தேர்வை ஒத்திவைத்தது.
பிறகு உச்ச நீதிமன்றம் 115 தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடுத்த வழக்கு ஒன்றின் அடிப்படையில் நீட் தேர்வை ரத்து செய்தது. ஆனால் 2016ல் உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பை மாற்றிக்கொண்டது. இந்த விவரங்களை எல்லாம் ஸ்டாலின் மறைத்துவிட்டார் என்றார் பன்னீர் செல்வம்.
அதிமுகவின் இதர தலைவர்களும் மாநில பாஜகவும் நீட் தமிழகத்தில் நடைமுறைக்கு வந்ததற்கு திமுகதான் காரணமென கூறினர்.