செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
fd9b0d4d-9072-4a54-b49b-58921d365d01
-

இரு ஆடவர்களிடம் ரூ.82 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

திருச்சி: சார்ஜாவில் இருந்து திருச்சி விமான நிலையத்தில் வந்திறங்கிய இரு பயணிகளைச் சுங்கத் துறை அதிகாரிகள் சோதித்தபோது, அவர்கள் பற்பசை வடிவத்தில் கடத்தி வந்திருந்த ரூ.82 லட்சம் மதிப்பிலான ஒன்றரை கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்தனர். ஏறக்குறைய 1,652 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஆடவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசியல் கட்சியினருக்கான வேட்டி, சேலை விற்பனை மும்முரம்

ஈரோடு: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி ஈரோடு ஜவுளிச் சந்தையில் அரசியல் கட்சியினர், தொண்டர்கள் விரும்பி அணியும் கட்சிக் கரைகள் உள்ள வேட்டிகள், சேலைகள் கடந்த ஒரு வாரமாக அமோகமாக விற்பனையாகி வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.10 லட்சத்திற்கும் மேல் வேட்டி, சேலைகள், துண்டு, மப்ளர், தொப்பி போன்றவை விற்பனையாகி உள்ளதாக ஜவுளிச் சந்தை வியாபாரிகள் கூறியுள்ளனர். சேலை, வேட்டி ரூ.150 வரையிலும் துண்டு ரூ.50 வரையிலும் விற்பனையாகின்றன.

செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் இரண்டாமிடம் வகிக்கும் தமிழகம்

சென்னை: பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக 'சுகன்யா சம்ரிதி' எனும் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தை அஞ்சல் துறை செயல்படுத்தி வருகிறது. செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் 26.03 லட்சம் கணக்குகள் தொடங்கி தேசிய அளவில் தமிழகம் 2வது இடத்திலும் 29.12 லட்சம் கணக்குகளைத் தொடங்கி உத்தரப்பிரதேச மாநிலம் முதல் இடத்திலும் உள்ளதாக அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின்கிழ், 2021ஆம் ஆண்டு வரை நாடு முழுவதும் 1.42 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

5,000க்கு கீழ் குறைந்தது பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் 33 நாள்களுக்குப் பிறகு கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 5,000க்கும் கீழ் குறைந்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 4,519 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் நான்கு வாரங்களுக்குப் பிறகு 1 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது. நேற்று 37 பேர் உயிரிழந்ததை அடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,809ஆக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.