மாமல்லபுரம்: இந்தியாவின் மிகப்பெரிய முதலைப் பூங்காக்களில் ஒன்றாக விளங்கும் சென்னை முதலைப் பண்ணையில் இருந்து 1,000 முதலைகள் குஜராத் மாநிலத்துக்குப் பயணம் செல்கின்றன.
சென்னை முதலைப் பண்ணை யில் உள்ள முதலைகளின் பெருக் கம் பல மடங்காக அதிகரித்த நிலையில், அவற்றுக்குப் போதுமான அளவில் உணவளிக்க முடியாத சூழலில் இம்முடிவு எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
இம்முதலைகளை பாதுகாப்பாக தனித்தனி பெட்டிகளில் அடைத்து அவற்றை கனரக லாரிகளில் ஏற்றி குஜராத்தில் உள்ள ஜாம்நகருக்கு அனுப்பி வருகின்றனர்.
வடநெம்மேலியில் உள்ள சென்னை முதலைப் பண்ணையில் 17 ரகங்களைச் சேர்ந்த 2,000த்துக்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை சதுப்பு நில முதலைகள் ஆகும்.
ஆசிய கண்டத்திலேயே அதிக முதலைகள் பராமரிக்கப்படும் முதலைப் பண்ணையாக சென்னை முதலைப் பண்ணை திகழ்கிறது.
கொரோனா பாதிப்பு, ஊரடங்கு காரணமாக கடந்த ஈராண்டுகளாக இப்பண்ணைக்கு வரும் வருகை யாளர்களின் எண்ணிக்கையும் வருமானமும் பாதிக்கப்பட்டது.
இதனால், ஏற்பட்ட நிதி நெருக்கடியால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கமுடியாமலும் முதலைகளுக்கு உணவு வழங்கி பராமரிப்பது சிரமமாகி விட்டதாக பண்ணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், 1,000 முதலை களைச் சென்னையில் இருந்து குஜராத்துக்கு கொண்டு செல்வதற்கான அனுமதியை மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் தமிழ்நாடு வனவிலங்கு காப்பகத்துக்கு அளித்தது. இதையடுத்து, கரியால் வகை முதலைகள், நன்னீர் முதலைகள், சதுப்பு நில முதலைகள் என 350 ஆண் முதலைகளும் 650 பெண் முதலைகளும் குஜராத்துக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

