தூத்துக்குடி: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி (சனிக்கிழமை) ஒரே கட்டமாக நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வார காலமே எஞ்சியுள்ள நிலையில், விதவிதமான பிரசார உத்திகளால் தேர்தல் களம் களைகட்டி வருகிறது.
ஒருபுறத்தில் தேநீர் கடைகள், இறைச்சிக் கடைகளில் வியாபாரம் செய்தும் ஆர்மோனியம் வாசித்தும் பாட்டு பாடியும் வாக்காளர்களிடம் வேட்பாளர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
மற்றொருபுறம் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு
காஞ்சிபுரம் மாவட்டம், செவிலிமேடு பகுதியில் போட்டியிடும் அதிமுக, கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அதிமுக திட்டங்களையும் முடக்குகிறது," என்று விமர்சித்துள்ளார்.
"காவல்துறையினர் நடுநிலையோடு செயல்படவேண்டும். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற வேண்டும். நான் இப்போதுள்ள பொம்மை முதல்வரைப்போல் இருக்க மாட்டேன். எக்காரியத்தை யும் துணிச்சலோடு செய்வேன்," எனவும் அவர் ேபசியுள்ளார்.
"கொங்கு மண்டலம் இன்று வரை அதிமுகவின் எஃகு கோட்டையாக உள்ளது," என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் கோவை பிரசாரத்தில் பேசியபோது கூறினார்.
இதற்கிடையே, குடும்ப அரசியல் ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என பிரதமர் மோடி விமர்சனம் செய்திருந்த நிலையில், "தமிழர்களின் நாட்டுப்பற்றுக்கு பிரதமரின் நற்சான்று தேவையில்லை," என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
'உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி' என்ற முழக்கத்தோடு ஐந்தாவது நாளாக ஈரோடு மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து காணொளி வழி நேற்று மாலை அவர் பிரசாரம் செய்தார்.
வாக்களிப்பு நேரடி கண்காணிப்பு
சென்னையில் அமைக்கப்பட்டு உள்ள 5,794 வாக்குச்சாவடிகளில் 1,100 வாக்குச்சாவடிகள் பதற்ற மானவை என கண்டறியப்பட்டு, வாக்களிப்பை நேரடியாகக் கண்காணிக்கும் வகையில் காணொளி பொருத்தப்பட்டு வருவதாக மாநகராட்சித் தேர்தல் அதிகாரி ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.
வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நடந்து வரும் நிலையில், வாக்களிப்பை முன்னிட்டு வரும் 19ஆம் தேதி பொது விடுமுறை அறிவித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

