செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
c5ad39e1-425d-4fe3-8840-3bee94ca8dd5
-

ஏடிஎம்மில் ேகட்பாரற்று இருந்த ரூ.9,500 பணத்தை ஒப்படைத்த தந்தை-மகன்

சேலம்: வங்கி ஏடிஎம் இயந்திரம் ஒன்றில் தானாக வெளிவந்திருந்த ரூ.9,500 ரொக்கத்தை காவல்துறை அதிகாரிகளிடம் ஒரு தந்தையும் மகனும் ஒப்படைத்தனர்.

சேலம் மாவட்டம், கோட்டமேட்டுப்பட்டியைச் சேர்ந்த சச்சின் என்பவர் பணம் எடுப்பதற்காக பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்முக்குச் சென்றபோது அந்த இயந்திரத்தில் இருந்து வெளியே வந்திருந்த பணத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே, தன்னுடைய தந்தை பாலசுப்ரமணியுடன் சென்று அந்தப் பணத்தை ஓமலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இளைஞரின் நேர்மையைப் பாராட்டிய உதவி ஆய்வாளர், பணம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றார்.

கீழடியில் எட்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கியது

கீழடி: சிவகங்கை மாவட்டம், கீழடியில் எட்டாம் கட்ட அகழாய்வுப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் நேற்று தொடங்கிவைத்தார். கீழடியிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான அகரம், மணலூர், கொந்தகை ஆகிய இடங்களில் இதுவரை ஏழு கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அங்கிருந்து ஏராளமான பழங்காலப் பொருள்களும் தொல்லியல் சான்றுகளும் கிடைத்து இருந்தன. இந்நிலையில், தமிழக தொல்லியல் துறை சார்பில் கீழடியில் எட்டாம் கட்ட அகழாய்வுப் பணியையும் கங்கை கொண்ட சோழபுரம், மாளிகைமேடு ஆகிய பகுதிகளில் 2ஆம் கட்ட அகழாய்வுப் பணியையும் முதல்வர் தொடங்கிவைத்தார்.

சரியான நேரத்திற்கு வராததால் பேருந்துகளைச் சிறைபிடித்த மக்கள்

ஆவடி: ஆவடியில் மாநகரப் போக்குவரத்துப் பணிமனை இயங்கி வருகிறது. இங்கிருந்து அரசுப் பேருந்துகள் சரியான நேரத்துக்கு வராததைக் கண்டித்து, அங்கு வசிக்கும் மக்கள் பேருந்து நிலையத்தில் திடீரென ஒன்றுகூடி, நேற்றுக் காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்துகள் முறையாக இயக்கப்படுவதில்லை, சரியான நேரத்திற்கு வருவதில்லை எனவும் குற்றம்சாட்டி அவ்வழியே வந்த அரசுப் பேருந்துகளைச் சிறைபிடித்தனர். இதனால், பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்து காவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

81 கோயில்களில் குடமுழுக்கு

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மே 7ஆம் தேதி முதல் நேற்றுவரை 81 கோயில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. அறநிலையத்துறையைச் சேர்ந்த 56 கோயில்களுக்கும் இதனைச் சேராத 25 கோயில்களுக்கும் குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளதாகவும் அது மேலும் கூறியுள்ளது.