திருவாரூர்: தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் அங்கு தேர்தல் பிரசாரம் பாதிக்கப்பட்டது.
மன்னர் வளைகுடா பகுதியில் புதிய வளிமண்டல சுழற்சி ஏற்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
குறிப்பாக கடலோர, டெல்டா மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட போதிலும், தேர்வு எழுத வேண்டிய மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்தது.
திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக வேளாண் அறுவடைப் பணிகளும் தேர்தல் பிரசாரமும் பாதிக்கப்பட்டன. காலை முதல் மாலை வரை மழை நீடித்ததால் ஏனைய மாவட்டங்களிலும் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில வேட்பாளர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் பிரசாரம் மேற்கொண்டனர்.
பல இடங்களில் சம்பா அறுவடை பணிகளும் செங்கல் சூளை பணிகளும் தடைபட்டன. மேலும், வெள்ள நீரில் பயிர்கள் மூழ்கி இருப்பதால் பெரும் நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். விவசாயத் தொழிலாளர்கள் வேலையின்றி முடங்கி உள்ளனர்.
இந்நிலையில், இன்று முதல் மழை மெல்ல குறையும் என்று கூறப்படுகிறது.

