சென்னை: தமிழகத்தில் எதிர்வரும் மார்ச் 2ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து, அரசியல் கூட்டங்கள் நடத்த கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நேற்று முன்தினம் தமிழகத்தில் அன்றாடத் தொற்று எண்ணிக்கை 3086 ஆக குறைந்துள்ளது.
இந்நிலையில், மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மிக முக்கியமாக சமுதாய, கலாசார, அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கும் உள்ள தடை நீடிக்கும் என்றும் திருமணம், அது சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் இருநூறு பேருடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இறப்பு சார்ந்த நிகழ்வுகளை நடத்த நூறு பேருக்கும் மிகாமல் அனுமதிக்கப்படும் என்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக விதிக்கப்பட்ட ஏனைய பிற கட்டுபாடுகள் அனைத்தும் விலக்கிக்கொள்ளப்படுகின்றன என்றும் அரசு கூறியுள்ளது.
இதற்கிடையே, மாநிலம் முழுவதும் பாலர் பள்ளிகள், மழலையர் விளையாட்டுப் பள்ளிகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொருள்காட்சிகள் நடத்தவும் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைத்து வகையிலும் ஒத்துழைக்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று முன்தினம் தமிழகத்தில் புதிதாக 3,086 பேருக்கு கிருமி தொற்றியது உறுதியானது. இதே வேளையில் தொற்றில் இருந்து 14,051 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வு, மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் மேலும் 25 பேர் தொற்றுப் பாதிப்பால் மாண்டுவிட்டனர்.
நேற்று முன்தினம் அனைத்து மாவட்டங்களிலுமே முந்தைய நாளைவிட புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் அன்றாடத் தொற்று எண்ணிக்கை இருநூற்றுக்கும் குறைவாகவே பதிவானது.

