புதுடெல்லி: எதிர்வரும் பாசன ஆண்டில் தமிழகத்துக்குரிய காவிரி நதிநீரை வழங்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 15வது கூட்டத்தின்போது மேகதாது அணை குறித்து விவாதிக்கக் கூடாது என தமிழகம் எதிர்ப்பை பதிவு செய்தது. நேற்று முன்தினம் காணொளி வசதி மூலம் இந்தக்கூட்டம் நடைபெற்றது. ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமை தாங்கினார்.
அப்போது, வரும் பாசன ஆண்டில் மாத வாரியாக உரிய நீரை பிலிகுண்டுலுவில் கர்நாடகா வழங்கிட வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும், மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கப்படுவதாக கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருப்பதை ஏற்க இயலாது என்று தமிழக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டிய தமிழக தரப்பு, நீதிமன்றத்தை மீறி விவாதிப்பது சரியல்ல என்ற வாதத்தை முன்வைத்தது.
இதையடுத்து, மேகதாது அணை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என தமிழக அரசு கூறியுள்ளது.

