செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
c72f290a-6970-41b8-b83f-e763d76105af
-

பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது

பெரம்பலூர்: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகார்களின் பேரில், ஆசிரியர்கள் கைதாவது நீடித்து வருகிறது. இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம், மலையப்ப நகரில் இயங்கி வரும் தொடக்கப் பள்ளியில் ஆசிரியரான 42 வயதான சின்னதுரை கைதாகி உள்ளார். இவர் மது அருந்திவிட்டு வகுப்புக்கு வந்து மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது. இதையறிந்த மாணவிகளின் பெற்றோர், காவல்துறையில் அளித்த புகாரை அடுத்து, ஆசிரியர் சின்னதுரை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அசாம் பெண் படுகொலை: உடலைப் பெட்டியில் வைத்து வீசியவர் கைது

திருப்பூர்: அசாமைச் சேர்ந்தவர் நேகா (30 வயது) என்ற பெண், அண்மையில் திருப்பூரில் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் அவரது உடலை ஒரு பெட்டியில் வைத்து சாலையில் வீசிச் சென்றனர். உடலைக் கைப்பற்றிய காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது. அப்போது நேகாவுடன், அசாமைச் சேர்ந்த அபிதாஸ் (28), கிலால் சர்வா (27) ஆகிய இருவர் வேலை பார்த்து வந்ததும் இருவரும் திடீரென தலைமறைவானதும் தெரிய வந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின்போது கிலால் சர்வா கைதானான். மற்றொரு குற்றவாளிக்கு வலை வீசப்பட்டுள்ளது. கொலைக்கான பின்னணி இன்னும் தெரியவில்லை.

சாலையில் நடந்து சென்ற இளையர் கல்லால் அடித்துக் கொலை

சென்னை: சாலையில் தனியாகச் சென்றுகொண்டிருந்த இளையரை திடீரென இருவர் கற்களாலும் கட்டையாலும் அடித்து தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இச்சம்பவத்தால் சென்னை மாம்பலம் பகுதியில் நேற்று முன்தினம் பரபரப்பு நிலவியது. முன்விரோதம் காரணமாக நடந்த கொலை தொடர்பாக இருவர் கைதாகி உள்ளனர்.

ஜாதகம் பார்ப்பதாக கூறி நகை பறித்து வந்த முதியவர் கைது

கோவை: திருமணத்துக்குப் பொருத்தமான வரன்களைத் தேடியவர்களிடம், ஜாதகத்தில் குறை இருப்பதாகக் கூறி நகைகளைத் திருடி வந்த முதியவர் கைதானார். சிதம்பரத்தைச் சேர்ந்த 82 வயதான ஆனந்த கிருஷ்ணன் என்பவர், ஊர் ஊராகச் சென்று ஜாதகம் பார்த்து பலன்களைச் சொல்லி வந்துள்ளார். அண்மையில், திருப்பூரைச் சேர்ந்த பூசைத்துரை என்பவர், ஒரு ஜாதகத்தைக் கொடுத்து வேறு ஏதேனும் குறைகள் (தோஷம்) உள்ளனவா என்று பார்க்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு, கோவையில் உள்ள கோனியம்மன் கோவிலுக்கு வருமாறு கூறியுள்ளார் ஆனந்த கிருஷ்ணன். அதன்படி, பூசைத்துரை தனது உறவினர்களுடன் மறுநாள் கோவிலுக்குச் சென்றுள்ளார். அப்போது பூசை செய்யும்போது நகை அணியக்கூடாது என்று கூறி, பூசைத்துரையின் உறவினரிடம் இருந்து தங்கச்சங்கிலியை அந்த முதியவர், இருவரது கவனத்தையும் திசைதிருப்பிவிட்டு, நகையுடன் மாயமானார். காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவர் பிடிபட்டார். அவர் பல இடங்களில் இவ்வாறு கைவரிசையைக் காட்டியது தெரிய வந்துள்ளது.