சென்னை: சென்னை புத்தகக் கண்காட்சிக்கு இணையம் வழி (ஆன்லைன்) சுமார் 20 ஆயிரம் பேர் நுழைவுச் சீட்டை முன்பதிவு செய்துள்ளனர்.
இத்தகவலை தென் இந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி)செயலாளர் முருகன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 16ஆம் தேதி முதல் மார்ச் 6ஆம் தேதி வரை சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது.
கொரோனா நெருக்கடி குறைந்துள்ளதை அடுத்து கண்காட்சியை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், இணையம் வழி செய்யப்பட்டுள்ள முன்பதிவுகளின் எண்ணிக்கை கண்காட்சி ஏற்பாட்டாளர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது.
சென்னை புத்தக கண்காட்சியில் ஆண்டுக்கு ஆண்டு புத்தக அரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. இந்த ஆண்டு சுமார் ஆயிரம் அரங்குகளை அமைக்க திட்டமிட்டு இருந்ததாகவும் கொரோனா நெருக்கடியால் அந்த எண்ணிக்கை 800ஆக குறைந்துள்ளது என்றும் ஏற்பாட்டாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இம்முறை சுமார் நூறாயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது.
"மேலும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பணிப் பெண்களுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
"கண்காட்சிக்கு வருகை தரும் அனைவரும் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்ட கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்," என 'பபாசி' தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.