மேலும் 21 தமிழக மீனவர்களைக் கைது செய்தது இலங்கைக் கடற்படை
சென்னை: ராமேசுவரம் மீனவர்கள் 21 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளதை அடுத்து, நீண்ட காலமாகத் தொடர்ந்து வரும் இந்தச் சிக்கலுக்கு நிலையான தீர்வைக் காண வேண்டியது மிகவும் இன்றியமையாதது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதன் தொடக்கமாக, இருதரப்புப் பேச்சுவார்த்தைகளுக்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் அவர் வலியுறுத்தி உள்ளார்.
நேற்று முன்தினம் ராமேசுவரத்தில் இருந்து ஐநூறுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் இரண்டாயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
தனுஷ்கோடி, தலைமன்னார் இடையே கடலில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இரண்டு விசைப்படகுகளில் இருந்த 12 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நள்ளிரவில் கைது செய்தனர்.
மேலும், மீனவர்களின் இரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைக் கண்டித்து நாகை பகுதி மீனவர்கள் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்த பிறகும் நிலைமை மாறவில்லை.
இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இவ்வாறு நடந்துள்ள மூன்றாவது சம்பவம் இது என்பதையும், தற்போது வரை, தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 41 பேரும் 6 மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் கடற்படையின் வசம் உள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"கொரோனா தீவிரம் குறைந்துள்ள தற்போதைய நிலையில், கூட்டுச் செயற்குழுக் கூட்டம் மூலம் பேச்சுவார்த்தைகளை உடனடியாக தொடங்க வலியுறுத்துகிறேன்.
இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கும் வழிவகை செய்திட வேண்டும்.
தமிழகத்தைச் சேர்ந்த 41 மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கைகளை விரைவுப்படுத்துங்கள்," என முதல்வர் ஸ்டாலின், பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் மேலும் வலியுறுத்தி உள்ளார்.
இதற்கிடையே, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் கொடுமைக்கு முடிவே இல்லையா? என பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் தினகரனும், இலங்கை அரசின் அட்டூழியங்களை எத்தனை நாள் வேடிக்கை பார்க்கப் போகிறோம் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

