கோவை: பணத்துக்காக விஷ ஊசி போட்டு பலரைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் தம்பதியர் கோவை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவையைச் சேர்ந்த 31 வயதான வாடகைக் கார் ஓட்டுநர் சனு அண்மையில் திடீரென மாயமானார். அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில், கோவை ஓணாப்பாளையம் பகுதியில் சனுவின் கார் நிற்பதும் அதன் அருகே பலத்த காயங்களுடன் அவரது உடல் காணப்படுவதாகவும் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
கொலைக்கான பின்னணி, கொலையாளிகள் குறித்து எந்தவிதத் தகவலும் இல்லை. எனினும், கடந்த 8ஆம் தேதியன்று இரவு வேளையில் ஓணாப்பாளையத்தைச் சேர்ந்த யாரோ சனுவை தொடர்பு கொண்டுள்ளனர்.
இதையடுத்து அந்தக் கைபேசி இணைப்பு யாருடையது என்று விசாரித்த காவல்துறையினர், தங்களுக்குக் கிடைத்த முகவரிக்குச் சென்றபோது அங்கு ஸ்டீஃபன், அவரது மனைவி அமலோற்பவம் (35 வயது) ஆகிய இருவரும் வசித்து வருவது தெரியவந்தது.
விசாரணையின்போது இருவரும் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதை அடுத்து, அதிகாரிகள் சந்தேகமடைந்தனர்.
எனவே விசாரணையை கடுமையாக்கியதை அடுத்து, சனுவை கொலை செய்ததாக ஸ்டீஃபன் ஒப்புக்கொண்டார். பணத்துக்காக இவ்வாறு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்டீஃபனின் முதல் மனைவி அவரைப் பிரிந்து சென்றுவிட்டார். அதன் பிறகு தமது குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் பணிக்கு வந்த அமலோற்பவத்தை அவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
"அமலோற்பவத்தின் முதல் கணவரை விஷ ஊசி போட்டுக் கொன்றேன். இது தொடர்பாக எங்கள் இருவர் மீதும் வழக்கு உள்ளது. கைதாகி சிறைக்குச் சென்று, பிணை பெற்று வெளியே வந்ததும் தலைமறைவானோம்.
"முதல் மனைவியின் சொத்துகள் மூலம் கிடைத்த பணத்தை வைத்துக்கொண்டு கடந்த ஆறு ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்தோம். அந்தப் பணம் கரைந்து போனதும் என்ன செய்வது என்று தெரியாமல் திருடலாம் என முடிவு செய்தோம்," என்று ஸ்டீஃபன் தமது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.
ஓட்டுநர் சனுவிடம் நிறைய பணம் இருப்பதாகத் தகவல் கிடைத்ததாகவும் அதனால்தான் அவரை தனியே வரவழைத்து கொன்றதாகவும் ஸ்டீஃபன் குறிப்பிட்டுள்ளார்.
பொது நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்துக்கு வந்தபின், கட்டையால் சனுவை தலையில் தாக்கியதில் அவர் மயங்கி விழ, அதன் பின்னர் மரணத்தை ஏற்படுத்தும் மாத்திரையை நீரில் கரைத்து அதை ஊசியாக செலுத்தி உள்ளனர்.
இதனால் இரண்டு நிமிடங்களுக்குள் சனுவின் உயிர் பிரிந்துவிட்டதாகவும் அவரிடம் ஆறாயிரம் ரூபாய் மட்டுமே இருந்ததாகவும் ஸ்டீஃபன் கூறியுள்ளார்.
சென்னையில் மட்டுமே நான்கு பேரை இவ்வாறு விஷ ஊசி போட்டுக் கொன்றதாக அவர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருவரிடமும் விசாரணை நீடித்து வருகிறது.

