சென்னையில் அன்றாட தொற்று எண்ணிக்கை 541ஆகப் பதிவானது
சென்னை: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்றுப் பாதிப்பு வேகமாகக் குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் மாநிலத்தில் புதிதாக 2,296 பேருக்கு கிருமி தொற்றியுள்ளது. இது முந்தைய நாளைவிட குறைவாகும். சென்னையில் நேற்று முன்தினம் 541 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்தில் நேற்று முன்தினம் 11 பேர் தொற்றுப் பாதிப்புக்குப் பலியாகிவிட்டனர். இதற்கிடையே, சென்னையில் நேற்று முதல் மின்சார ரயில்கள் நூறு விழுக்காடு அளவில் இயக்கப்படுகின்றன.
ஏமன் நாட்டுக்குச் சென்று திரும்பிய இளையர் விமான நிலையத்தில் கைது
சென்னை: ஏமன், லிபியா உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள மத்திய அரசு கடந்த 2014ஆம் ஆண்டு தடை விதித்தது. இந்நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை பாயும் என்றும் அறிவித்துள்ளது.இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கட்டுமானப் பணிக்காக சவூதி அரேபியா சென்ற விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 41 வயதான முருகன், அங்கிருந்து பின்னர் ஏமன் நாட்டுக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் சார்ஜாவில் இருந்து நேற்று முன்தினம் அவர் சென்னை திரும்பினார். இதையடுத்து தடையை மீறி ஏமன் சென்றதற்காக அவரை காவல்துறை கைது செய்தது.
அத்தையைக் கொன்று உடலை ஏரிப் பகுதியில் புதைத்த இளையர் கைது
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த 55 வயதான அன்னபூரணி என்பவரின் சடலம் சில தினங்களுக்கு முன்னர் சூரப்பள்ளம் ஏரிப்பகுதியில் காணப்பட்டது. அவர் அணிந்திருந்த நகைகளைக் காணவில்லை என்பதால் யாராவது நகை பறிக்கும் நோக்கத்தில் கொலை செய்திருக்கலாம் எனக் கருதப்பட்டது. விசாரணையின்போது, அன்னபூரணியின் அண்ணன் மகனான 30 வயது முருகானந்தம் மீது காவல் துறையினருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. தீவிர விசாரணையை அடுத்து, அன்னபூரணியின் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை தன் பெயருக்கு எழுதித் தருமாறு தாம் கேட்டதாகவும் அதற்கு தன் அத்தை மறுத்ததால் அவரை அடித்துக் கொலை செய்ததாகவும் முருகானந்தம் தெரிவித்தார். அதனால் பின்னர் தன் அத்தையின் சடலத்தை இருசக்கர வாகனத்தில் வைத்து, தாம் மட்டுமே நான்கு கிலோ மீட்டர் தூரம் ஓட்டிச்சென்று ஏரிப்பகுதியில் புதைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அவதூறாகப் பேசியதாக சல்மான் குர்ஷித் மீது காவல்துறையில் புகார்
புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் மீது டெல்லி காவல்துறையில் அவதூறு பேச்சுத் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் அவர் இந்து மதம் குறித்து அவதூறாகப் பேசியதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் இருவர் காவல்துறையில் புகார் அளித்தனர். சல்மான் குர்ஷித்தின் பேச்சு இந்துக்களின் மனத்தைப் புண்படுத்துவதாக அமைந்துள்ளது என அவர்கள் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: 36ஆம் கட்ட விசாரணை தொடங்கியது
தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஒருநபர் விசாரணை ஆணையம் நேற்று 36வது கட்ட விசாரணையைத் தொடங்கியது. முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், முன்னாள் காவல்துறை தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் விசாரணைக்கு நேரில் முன்னிலையாக வேண்டும் என அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இது குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. 36வது கட்ட விசாரணையின் போது ஏழு பேரிடம் வாக்குமூலம் பெறப்படும் எனத் தெரிகிறது.
புற்றுநோய்க்கும் மருத்துவக் காப்பீடு
சென்னை: முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் புற்றுநோய்க்கும் சிகிச்சை பெறலாம் என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற முடியும். இந்த அறிவிப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

