சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு எதிராகப் போட்டி வேட்பாளர்களாகக் களமிறங்கி உள்ள 56 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதால் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இம்முறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, இத்தேர்தலில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தங்கள் வாரிசுகளுக்கும் குடும்பத்தாருக்கும் வாய்ப்பு கேட்டு தலைமைக்கு நெருக்கடி கொடுக்கக்கூடாது என்று கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகக் கூறிவிட்டதாகத் தகவல் வெளியானது.
மேலும், கூட்டணிக் கட்சிகளுக்கான வார்டு ஒதுக்கீடு குறித்து திமுக மாவட்ட செயலாளர்களே முடிவு செய்வார்கள் என்றும் கூறப்பட்டது. அதன்படி, இடப்பங்கீடு முடிவடைந்து தேர்தல் பிரசாரமும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத சிலர், திமுக, அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை எதிர்த்து களமிறங்கி உள்ளனர்.
அவர்கள் அனைவரும் உடனடியாக போட்டியில் இருந்து விலக வேண்டும் என திமுக தலைமை கடுமையாக எச்சரித்தபோதும் பலன் இல்லை.
இதையடுத்து, போட்டி வேட்பாளர்களாக களமிறங்கிய 56 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை வழி தெரிவித்துள்ளார்.
"திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததால், 56 பேரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்," என துரைமுருகன் தமது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, வத்திராயிருப்பு பேரூராட்சி 2ஆவது வார்டு திமுக வேட்பாளரான 43 வயது முத்தையா என்பவர் மாரடைப்பால் காலமானார். அந்த வார்டுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்படுகிறது.

