சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவுக்கு வருகிறது.
இதையடுத்து அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இம்முறை தேர்தல் களத்தில் எட்டு முனைப் போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணி, அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, மநீம, அமமுக, நாம் தமிழர் சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இவை தவிர, சில உதிரிக் கட்சிகளும் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் ஆங்காங்கே போட்டியிடுகின்றனர்.
தேர்தல் களத்தில் ஏதேனும் முறைகேடுகள் நடக்கின்றனவா என்பதை கண்காணிக்க மாநிலத் தேர்தல் ஆணையம் அதிகாரிகளை நியமித்துள்ளது. பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இதுவரை மாநிலம் முழுவதும் ரூ.9.28 கோடி மதிப்புள்ள ரொக்கப்பணம், பொருள்கள், மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பொருள்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் வாக்குப்பதிவு முடியும் வரை இந்த நடவடிக்கை நீடிக்கும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, சென்னையில் பறக்கும் படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான ககன்தீங் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
கடைசி நேரத்தில் வாக்காளர்களைக் கவர பணப்பட்டுவாடா நடக்கலாம் என்று கூறப்படுவதால் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, 45 பறக்கும் படைகள் செயல்பட்டு வரும் நிலையில், மேலும் 45 படைகள் அமைக்கப்படுவதாக ககன்தீங் சிங் பேடி கூறியுள்ளார். சென்னை மட்டுமல்லாமல், மாநிலம் முழுவதும் வாகனச் சோதனை நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலையொட்டி தமிழகத்தில் மூன்று நாள்களுக்கு மதுக்கடைகள் மூடப்பட உள்ளன.
இதனால் நேற்று மதுக்கடைகளில் கூட்டம் முண்டியடித்தது. பலர் மூன்று நாள்களுக்கும் தேவையான மதுப்புட்டிகளை மொத்தமாக வாங்கி அள்ளிச் சென்றனர்.
நேற்று ஒரே நாளில் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள மது வகைகள் விற்பனையாகி இருக்கக்கூடும் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை மறுதினம் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அதிகரிக்கும் தேர்தல் பறக்கும் படைகள்; தீவிர கண்காணிப்பு

